குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு செய்துள்ளது. இன்று மற்றும் நாளை குஜராத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் இருந்து அழைப்பு வந்தபோதும், அதில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020ஐ அமல்படுத்துவது குறித்து விவாதிக்க குஜராத்தின் காந்திநகரில் கல்வி அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாட்டை மத்திய அரசு நடத்தவுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மாநில திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தவிர, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்களும் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று கல்வி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், தேசிய கல்விக் கொள்கை 2020, பள்ளிகளில் திறன் மற்றும் டிஜிட்டல் முன்முயற்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, நாட்டில் கல்விச் சூழலை வலுப்படுத்துவது குறித்த விவாதங்களுக்கு மாநாடு சாட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாள் நிகழ்வின் போது, குஜராத் அரசாங்கத்தின் பள்ளிக் கல்விக்கான கட்டளைக் கட்டுப்பாட்டு மையமான வித்யா சமிக்ஷா கேந்திரா (VSK), மற்றும் பாஸ்கராச்சார்யா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் மற்றும் ஜியோ-இன்ஃபர்மேட்டிக்ஸ் (BISAG) ஆகியவற்றை அமைச்சர்கள் பார்வையிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாடு அமைச்சர்கள் மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய கல்விதுறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தலைமையிலான அனைத்து மாநில கல்வி செயலாளர்களுடனான கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்