பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கக் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகையான ஆசிரியர்களின் 2024- 25ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்வு, மே 24 முதல் ஜூன் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. எமிஸ் இணையதளம் மூலமாக இந்தக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
* கலந்தாய்வில் கலந்துகொள்ள விரும்பும் ஆசிரியர்கள், விண்ணப்பங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* பொது மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், தற்போது பணிபுரியும் பள்ளியில் ஜூன் 1-ம் தேதியன்று ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும்.
* மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர் ஒப்புதல் அளித்தபிறகு, ஒரு பிரதியை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
* ஆசிரியர்கள் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை மே 13 முதல் 17ஆம் தேதி வரை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை (Priority) கோரி விண்ணப்பிக்கும்போது அதற்கான உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை (ஆவண நகல்) இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
* தற்போது பணிபுரியும் பள்ளியில் மாறுதல் பெற்ற வகை (ஏற்கனவே பெற்ற மாறுதல் ஆணை இணைக்கப்படல் வேண்டும்) விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயர்வு, நிர்வாக மாறுதல், அலகுமாறுதல், பணிநிரவல் ஆகியவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* மேல்நிலைப் பிரிவில் உயிரியியல் பாடப்பிரிவில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும்போது தாம் பயின்ற நகம் மேஜர் பாடம் பற்றிக் குறிப்பிடவேண்டும் மற்றும் எந்த பணியிடத்தில் பணிபுரிகிறார் என்ற விவரத்தினையும் குறிப்பிடப்படவேண்டும்.
* கணவன்- மனைவி முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர்கள் பணிபுரியும் அலுவலகம் / பள்ளி அரசு மற்றும் அரசுத் துறையின் நிருவாகத்தின் கீழ் உள்ளதா என்ற விவரத்தினையும், அதற்கான உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்றினையும் பதிவேற்றம்செய்யப்படவேண்டும். கணவன்-மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30கி.மீ மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்யப்படவேண்டும்.
* மனமொத்த மாறுதல்கள் மற்றும் அலகுவிட்டு அலகு மாறுதல் & துறை மாறுதல்கள் தொடர்பான விண்ணப்பங்கள், பொதுமாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் பரிசீலிக்கப்படவேண்டும்.
* உள்மாவட்டத்திற்கு மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள்தங்களுக்குரிய சுழற்சி (turn) வரும்போது அம்மாவட்டத்தில் தங்களுக்கு மாறுதல் பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள காலிப்பணியிடம் ஏதும் இல்லையெனில் Not Willing என தெரிவு செய்து கொள்ளலாம்.
* பின்னர் உள்மாவட்டத்திற்கான கலந்தாய்வு முழுமையாக முடிவு பெற்ற பிறகு இறுதியாக மீதம் உள்ள (Resultant Vacancy) காலிப்பணியிடங்களில், அவ்வாறு Not Willing தெரிவு செய்தவர்களுக்கு மீண்டும் ஒரு முறை உள்மாவட்டத்திற்குள் மாறுதல் பற வாய்ப்பு அளிக்கும் வகையில் அவரவர்களின் முன்னுரிமைப்படி மீண்டும் ஒரு முறை காலிப்பணியிடங்களை விருப்பத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர்.
* மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter district transfer) கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது தற்போது பணிபுரியும் மாவட்டத்தினை தவிர்த்து பிற மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தினையே தெரிவு செய்யப்படவேண்டும். (தனியரின் தற்போது பணிபுரியும் மாவட்டம் EMIS இணையத்தில் காண்பிக்கப்படமாட்டாது)
* மேலும் மாறுதலுக்கும் விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் உள்மாவட்டம் / மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய இரு கலந்தாய்விற்கும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்கள் உள்மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.
* மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகைபுரியாமலோ தாமதமாக வருகைபுரிந்தாலோ கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாது.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.