பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது. அதேபோல ஜூலை 28ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை இன்று (ஜூலை 13) காலை கிண்டி, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். இதன்படி,  பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது ஜூலை 28ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

1,78,959 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியான நிலையில், கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் 1,57,378 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 3,100 இடங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. 11,804 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து படித்து, பொறியியல் கலந்தாய்வில் இடம்பெற உள்ளனர்.  அங்கீகாரம் பெற்றும் 430 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையை நடத்த உள்ளன. 

சிறப்புப் பிரிவுக்கு 1, பொதுப் பிரிவுக்கு 2 என மொத்தம் 3 கட்டங்களாகக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலி இடங்கள் இருந்தால், அவற்றை நிரப்பக் கூடுதலாக ஒரு கலந்தாய்வு நடத்தப்படவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இணையதள வாயிலாக நடைபெறும் துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

செப்டம்பர் 11ஆம் தேதி வரை கலந்தாய்வு 

அருந்ததியர்களிடம் இருந்து காலியாக உள்ள இடங்களை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றும் கலந்தாய்வு செப்டம்பர் 10, 11ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இறுதி நாள் கலந்தாய்வு செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது. 

பின்னணி என்ன?

பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்குவதாகவும். 5ஆம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வுக்குப் பிறகு, பொதுப் பிரிவினருக்கு 7ஆம் தேதி தொடங்கும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது. இந்தக் கலந்தாய்வு செப்டம்பர் 24 வரை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தத் தேதி மாற்றப்பட்டு, ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் புதிய தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு

சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சிறப்பு இடங்கள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்களுக்கான அசல்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு சென்னையில்‌ நேரடியாக நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. 

கூடுதல் விவரங்களுக்கு:

தொடர்பு எண்‌: 044 - 2235 1014 / 1015அழைப்பு எண்‌: 1800 - 425 - 0110

இ- மெயில் முகவரி: tneacare@gmail.com