பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
தரவரிசை பட்டியல்:
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி மதியம் 12 மணிக்கு வெளியிடுகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பி.இ./ பி.டெக். / பி.ஆர்க். பட்டப் படிப்புகளில் இணைவதற்கு, கடந்த மே 5ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது. இதில், 2, 29,167 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்து, அவற்றில் 1,87,693 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
பொறியியல் படிப்பு:
கடந்த ஜூன் 4ம் தேதி வரை சுமார் 1,55,124 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பானது கடந்த 14ம் தேதி வரை நேரடியாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 2,29,167 மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 26) வெளியாக இருக்கின்றன. மாணவர்கள் தரவரிசை பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30ம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஜூலை 2ல் கலந்தாய்வு தொடங்குகிறது. ஜூலை 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
ரேண்டம் எண்:
முன்னதாக, இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிப்பு தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், “ 2023-2024 ம் ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-2022ம் கல்வியாண்டில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தரவரிசை மதிப்பெண்கள், இயற்பியலில் பெற்ற மதிப்பெண்கள், கணித பாட மதிப்பெண்கள், விருப்பப் பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள், பிறந்த தேதி உள்ளிட்டவை ஒன்றாக இருக்கின்றபோது இறுதியாக ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். கணக்கு. இயற்பியல், வேதியியல் ஆகியப் பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் (கணக்கீடு செய்யப்பட்ட கட் ஆஃப், இரு மாணவர்களுக்குச் சமமாக இருந்தால், முதலில் [ கணித மதிப்பெண்ணும், இரண்டாவதாக இயற்பியல் மதிப்பெண்ணும், மூன்றாவதாக 'விருப்பப் பாடத்தின் மதிப்பெண்களும் கணக்கீடு செய்யப்படும். இந்த மூன்று பாடங்களின் மதிப்பெண்ணும் சமமாக இருந்தால், அடுத்ததாக 12ஆம் வகுப்பின் மொத்த மதிப்பெண்களும் கணக்கிடப்படும்.
அதுவும் சமமாக இருந்தால், பிறந்த தேதியில் மூத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்கண்ட அனைத்தும் சமமாக இருந்தால் மட்டுமே ரேண்டம் எண் கணக்கீடு செய்யப்படும். அதன்படி, ரேண்டம் எண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை வழங்கப்படும்” என தெரிவித்திருந்தார்.