TN Budget 2025: பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி குறைப்பா? பள்ளிகளில் செஸ் பாடம்- பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2,725 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2025- 26ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் பள்ளிக் கல்வித்துறைக்கு 46,767 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளாக, வழக்கமாக ஒதுக்கப்படும் தொகையோடு தொடர்ச்சியாக தலா நான்காயிரம் கோடி ரூபாய் ஆண்டுதோறும் அதிகமாக ஒதுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த முறை 2,000 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. எனினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2,725 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்புகள் என்னென்ன?
* மாநிலம் முழுவதும் 2,000 பள்ளிகளில் ரூ.160 கோடியில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்படும். இதற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அரசுப் பள்ளிகளில் ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும், ரூ.56 கோடியில் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களும் தரம் உயர்த்தப்படும்.
* மலைப் பகுதிகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க, உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
* பள்ளிக் கல்வியில் சதுரங்க ஆட்டத்தை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
இவ்வாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.