தமிழ்நாடின் 2025-2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்துடன் இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை வெளியிட உள்ளார். இந்த நிலையில் சேலம் மாவட்ட பட்ஜெட் எதிர்பார்ப்புகள் இதுதான்.
சேலம் மெட்ரோ ரயில் திட்டம்:
சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டு கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் கொண்டு வருவதற்கு கடந்த 2021 - 2022 ஆம் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள சேலம், திருச்சி மற்றும் நெல்லை மாநகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய கடந்த 2023 ஆம் ஆண்டு அரசு அறிவித்தது. இதன்படி, தமிழ்நாட்டில் ஐந்தாவது பெரிய மாநகராட்சியாக சேலம் உள்ளது. சேலம் மாநகரில் இரண்டு வழித்தடங்களில் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வருவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு நாளை நடைபெற உள்ள தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
கலைஞர் நூலகம்:
சேலம் மாநகர பகுதியில் நவீன கணினி வசதிகளுடன் கூடிய நூலகம் அமைத்துத் தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி மதுரையில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை போல, சேலம் மாநகர பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட நூலகம் அமைத்து தர வேண்டும் என புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே இதற்கான நிதி ஒதுக்கீடு நாளை நடைபெற உள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம்னி பஸ் நிலையம்:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகளுக்கான தனி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக கருதப்படும் சேலம் மாவட்டத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான தனி பேருந்து நிலையம் இல்லை. சேலம் புதிய பேருந்து நிலையத்தை பொருத்தவரை நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். ஆனால் சேலத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான தனி பேருந்து நிலையம் இல்லாததால் புதிய பேருந்து நிலையத்தின் சாலைகளில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டு வருகிறது. எனவே சேலத்திற்கு புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
புதிய பஸ்போர்ட்:
கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, சேலம் மாமாங்கம் பகுதியில் புதிய பஸ்போர்ட் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் திமுக ஆட்சி அமைந்த உடன் இந்த திட்டம் கைவிடப்பட்டது. கூட்ட நெரிசல் அதிகம் உள்ள சேலம் மாநகரப் பகுதியில் இருந்து வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் சிரமமின்றி பயணிக்க பஸ்போர்ட் அமைக்க வேண்டும் என சேலம் மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
புதிய தொழிற்பூங்கா:
சேலம் மாவட்டத்தில் பட்டதாரி இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு பெரு நிறுவனங்கள் சேலத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே வளர்ந்து வரும் நகரமாக உள்ள சேலம் மாவட்டத்தில் புதிய தொழிற் பூங்கா அமைத்து தர வேண்டும் என சேலம் இளைஞர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.