தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுக்கு முன்பு அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக காலாண்டு, அரையாண்டுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வு எப்போது?
அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 18ம் தேதியான வியாழக்கிழமை ( 18.09.2025) காலாண்டுத் தேர்வுகள் தொடங்குகிறது. அன்று தொடங்கும் காலாண்டுத் தேர்வு அடுத்த ஒரு வார காலத்திற்கு நடக்கிறது. செப்டம்பர் மாதம் 26ம் தேதி காலாண்டுத் தேர்வு முடிகிறது.
இதையடுத்து, காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை செப்டம்பர் மாதம் 27ம் தேதியான சனிக்கிழமை தொடங்குகிறது. பின்னர், வழக்கம்போல ஒரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்படும்.
அரையாண்டுத் தேர்வு எப்போது?
இதையடுத்து, 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதம் 15ம் தேதியான திங்கள் கிழமை ( 15.12.2025) தொடங்குகிறது. இந்த தேர்வுகள் ஒரு வார காலத்திற்கு நடக்கிறது. பின்னர், அதே டிசம்பர் மாதம் 23ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் முடிகிறது.
பின்னர், டிசம்பர் மாதம் 24ம் தேதி அரையாண்டுத் தேர்வுக்கான விடுமுறை தொடங்குகிறது. அவ்வாறு தொடங்கும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை புத்தாண்டு வரை நீடிக்கும்.
பொதுத்தேர்வு எப்போது?
மேலும், அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார். மாணவர்கள் மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.