செங்கல்பட்டு நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.
செங்கல்பட்டு நகர பேருந்து நிலையம்
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், கல்பாக்கம், மாமல்லபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், திருப்போரூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. குறிப்பாக 10 நிமிடத்திற்கு ஒருமுறை செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை புறநகர் மாவட்டம் என்பதால், சென்னை நோக்கி ஏராளமான பொதுமக்கள் படையெடுப்பது வழக்கமாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு, செங்கல்பட்டு தலைநகரை நோக்கி நிர்வாக காரணங்களுக்காக படையெடுக்கும் பொது மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் - Chengalpattu New Bus Stand
செங்கல்பட்டு நகர் பகுதியில் கடந்த 1989ல் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இது அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்றதாக இருந்தது. ஆனால் இப்போது மக்கள் தொகை அதிகரித்து இருப்பதால், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நெரிசல் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர். முறையான இருக்கை வசதி கூட இல்லாததால் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பை அடைந்து வருகின்றனர். முறையாக கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால், செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு நகர பேருந்து நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு செங்கல்பட்டிற்கு புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக வணிக வளாகங்களுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.
இதற்காக டெண்டர் விடப்பட்டு அந்த டெண்டர் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. விரைவில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானம் பணிகள் தொடங்கினால் அடுத்த 18 மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம்
செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டப்பட்டு வருகிறது. தொலைதூரங்களுக்கு செல்லும் பேருந்துகள் செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து, இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கல்பட்டு நகர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து, நகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, செங்கல்பட்டு நகர பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம், காஞ்சிபுரம், உத்திரமேரூர், மாமல்லபுரம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம் செயல்பட்டிற்கு வந்த பிறகு, தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கான பேருந்துகளும் செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது செங்கல்பட்டு நகர் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.