Tamil Nadu 12th Result 2024 Topper: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூரைச் சேர்ந்த மகாலட்சுமி, நான்கு பாடங்களில் 100 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளார்.


598 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்:


தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த, மகாலட்சுமி எனும் மாணவி 598 மதிப்பெண்களை எடுத்து அசத்தியுள்ளார். சேடர்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த அவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்களை எடுத்துள்ளார். இதுபோக பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிக கணக்குவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை அசத்தியுள்ளார். இதன் மூலம் நடப்பாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த நபராக மகாலட்சுமி கருதப்படுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தான், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டமாக உள்ளது. 


இதையும் படியுங்கள்: 12th Result District Wise: பிளஸ்-2 ரிசல்ட் .. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்.. முதல், கடைசி இடம் யாருக்கு?


மிக்க மகிழ்ச்சியாக உள்ளது - மகாலட்சுமி:


12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 598 மதிப்பெண்கள் பெற்றது தொடர்பாக பேசிய மகாலட்சுமி, “இன்று நான் 598 மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறேன் என்றால், எனக்கு பின்புலமாக இருந்தவர்களுக்கு கட்டாயம் நன்றி கூற வேண்டும். அதன்படி எனது ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், பெற்றோர் மற்றும் எனது நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக சிஏ படிப்பை படிக்க உள்ளேன். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.


இதனிடையே, செங்கல்பட்டைச் சேர்ந்த சாய் தர்ஷினி எனும் மாணவி 597 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளார். தமிழில் 98 மதிப்பெண்களையும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களையும் எடுத்துள்ளார். இதுபோக, பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிக கணக்குவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை அசத்தியுள்ளார். 


இதையும் படியுங்கள்: TN 12th Results Schools Wise: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்: ஆண்கள் பள்ளியை விட இருபாலர் பள்ளிகளே டாப்!


கடந்தாண்டு சரித்திரம் படைத்த நந்தினி:


கடந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, நந்நினி எனும் மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்தார். திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற அவர் தமிழ், ஆங்கிலம், பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, மொத்த மதிப்பெண்ணாக 600-க்கு 600 மதிப்பெண் வாங்கினார். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடமும், மாநிலத்தில் முதலிடமும் பெற்றார்.