மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள், மே 6ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியாகின. குறிப்பாக சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.


94.56% பேர் தேர்ச்சி


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மறு கூட்டல்‌ / மறு மதிப்பீடு முடிவுகள்‌ நாளை மறுநாள் (ஜூன் 18) வெளியாகும் என்று ‌ அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


’’நடைபெற்று முடிந்த மார்ச்‌ 2024, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத் தேர்வுகள்‌ எழுதி, மறு கூட்டல்‌ (Re-total) மற்றும்‌ மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள்‌, மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்களது பதிவண்களின்‌ பட்டியல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ Notification பகுதியில்‌ 18.06.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று பிற்பகல்‌ வெளியிடப்பட உள்ளது.


இடம்பெறாத பதிவெண்களுக்கு என்ன அர்த்தம்?


இப்பட்டியலில்‌ இடம்‌ பெறாத பதிவெண்களுக்கான விடைத் தாள்களில்‌ எவ்வித மதிப்பெண்‌ மாற்றமும்‌ இல்லை எனத்‌ தெரிவிக்கப்படுகிறது.


மறு கூட்டல்‌ / மறு மதிப்பீட்டில்‌ மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்கள்‌ மட்டும்‌, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில்‌ தங்களது பதிவெண்‌ மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள்‌ அடங்கிய மதிப்பெண்‌ பட்டியலை (Statement of Marks) பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ எனவும்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.


அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது?


மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்தேர்‌வெழுதிய தேர்வர்களுக்கு அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்‌ வழங்கப்படும்‌ தேதி குறித்து பின்னர்‌ அறிவிக்கப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது’’.


இவ்வாறு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது.