ஜூலை முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கண்ணப்பா படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என நடிகர் விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ளார். 


தெலுங்கில் முகேஷ் குமார் சிங் இயத்தில் உருவாகியுள்ள படம் “கண்ணப்பா”. இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, ப்ரீத்தி முகுந்தன், சரத்குமார், பிரம்மானந்தம், மோகன் பாபு, ஐஸ்வர்யா, முகேஷ் ரிஷி, சுரேகா வாணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் மோகன்லால், அக்‌ஷய்குமார், பிரபாஸ், காஜல் அகர்வால் என முன்னணி பிரபலங்களும் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய அளவில் பிரமிப்பை ஏற்படுத்திய நிலையில் படம் அதீத எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.


இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு மஞ்சு பேசுகையில், “கண்ணப்பா படம் தொடங்கிய முதல் நாளிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படமாகி வருகிறது. சமூக வலைதளங்களில் இப்படத்துக்கு ரசிகர்களுக்கான ஆதரவைப் பார்த்தேன். அதனால் தான் அவர்களில் சிலரை இங்கு அழைத்தேன்.


2014 ஆம் ஆண்டு கண்ணப்பாவின் பயணம் தொடங்கியது. 2015-ல் நான் கண்ணப்பாவை தொடங்கும் போது, ​​என் கடவுள், என் அப்பா மோகன்பாபு, வின்னி, அண்ணன் வினய் ஆகியோர் கொடுத்த ஊக்கத்தால் தான் என்னை முழுவதுமாக நம்பி கண்ணப்பாவை திரைக்குக் கொண்டு வர முடிந்தது. 






படம் தொடங்க நினைத்த போது அதற்கான சரியான குழு எனக்கு அமையவில்லை என்றாலும், சிவபெருமான் அனுமதி அளித்ததால் படத்தை தொடங்குவதற்கான அனைத்தையும் நான் தயார் செய்தேன், அதற்கு காரணம் கண்ணப்பாவின் ஆசீர்வாதமும் கூட. இதை ஒரு புராணக்கதை என்று மட்டுமே பார்க்க கூடாது. 14 ஆம் நூற்றாண்டில் நாயனார்களைப் பற்றி கவிஞர் துர்ஜதி எழுதினார். கண்ணப்பா ஒன்பதாவது நாயனார். இது 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேயர்களால் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது.


அந்த புத்தகத்தை பிகானர் பல்கலைக்கழகத்தில் கண்டோம். அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, அதை மிகவும் கவனமாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு பயணிக்கிறேன். கண்ணப்பா என் குழந்தை மாதிரி. ஏன் இத்தனை கலைஞர்களை இந்தப் படத்துக்குத் தேர்வு செய்தார்கள் என்பது படத்தை பார்த்த பிறகுதான் அனைவருக்கும் புரியும்.


இனிமேல், ஜூலை முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கண்ணப்பாவிடம் இருந்து அப்டேட்கள் வரும். இது என் பார்வையில் எழுதப்பட்ட 'கண்ணப்பா', அதனால் தான் கண்ணப்ப உலகத்துக்கு எல்லாரையும் அழைத்தோம். நான் இரண்டாம் நூற்றாண்டின் கதையைச் சொல்கிறேன், அந்தக் காலகட்டத்திற்கு ஏற்றவாறு படத்தை நியூசிலாந்தில் படமாக்கினோம். பட்ஜெட் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை, வரலாற்றில் இடம்பிடிக்கும் ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கையுடன் படத்தை தயாரித்து வருகிறோம். ப்ரீத்தி முகுந்தன் நெமாலியாக நடிக்கிறார். கண்ணப்பாவை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.