தஞ்சாவூர்: மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 26ம் இடத்தை பிடித்துள்ளது. மாவட்ட அளவில் 7 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 93.46 சதவீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்து மதிப்பெண்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்தன. இதையடுத்து இன்று காலை பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தஞ்சை மாவட்டத்திலும் பிளஸ்-2 பொதுத் தேர்வினை 227 பள்ளிகளை சேர்ந்த 12,102 மாணவர்களும், 14 ஆயிரத்து 103 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 205 மாணவ, மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். தனித்தேர்வர்கள் 212 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். தஞ்சை மாவட்டத்தில் மாணவர்கள், 11819, மாணவிகள் 13915 என மொத்தம் 25734 பேர் தேர்வை எழுதினர்.
நேற்று வெளியான தேர்வு முடிவுகளின் படி மாணவர்கள் 10710 பேரும், மாணவிகள் 13342 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவ, மாணவிகளின் மொத்த தேர்ச்சி 24,052 ஆகும். இதில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 90.62 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 95.88 சதவீதமாகும். மாணவ, மாணவிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.46 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டு பிளஸ் -2 தேர்ச்சி சதவீதம் 95.18 ஆக இருந்தது. ஆனால் இந்தாண்டு இந்த தேர்ச்சி விகிதம் 1.72 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 104 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 4108 மாணவர்களில் 3468 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்ச்சி சதவீதம் 84.42 ஆகும். இதேபோல் மாணவிகள் 6000 பேர் தேர்வு எழுதியதில் 5, 626 தேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்ச்சி சதவீதம் 93.77 ஆகும். மாணவ, மாணவிகள் என மொத்தம் 10108 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 9094 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் தஞ்சை மாவட்டம் 26ம் இடம் பிடித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 7 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளது. தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பள்ளி, கரிசல்வயல், பின்னையூர், உரந்தைராயன்குடிகாடு, தெக்கூர், கரிக்காடிப்பட்டி, தஞ்சை மேம்பாலம் பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் 32 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 93.7 சதவீதம் ஆகும்.