12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறித்து காணலாம்.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது
10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை தமிழ்நாட்டில் அமலில் இருந்து வரும் நிலையில், மாணவ, மாணவியர்களின் உயர்கல்வியை நிர்ணயிக்க செய்வதில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மிக முக்கிய பங்குகளை வகிக்கிறது. இத்தகைய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது.
சுமார் 3 ஆயிரத்து 225 மையங்களில் நடந்த பொதுத்தேர்வுகளை தமிழ்நாட்டில் சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியில் 14 ஆயிரத்து 728 மாணவ, மாணவிகளும் எழுதினர். விடைத்தாள்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 11 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சுமார் 50 ஆயிரம் முதுகலை ஆசிரியர்களை கொண்டு திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மே 7 ஆம் தேதி இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டதால் மாணவர்களின் மனநிலையை பாதிக்கலாம் என பலரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி மே 8 ஆம் தேதியான இன்று காலை 9.30 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவ, மாணவிகள் www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
சாதனைப் படைத்த பள்ளிகள்
அரசு பள்ளிகளில் திருப்பூர் (96.45 %), பெரம்பலூர் (95.90%), விருதுநகர் (95.43%), கன்னியாகுமரி (95.23%), சிவகங்கை (95.22%), அரியலூர் (95.06%), நாமக்கல் (95.03%), ஈரோடு ( 94.73%), தூத்துக்குடி (94.50%), கோவை (93.81%) ஆகிய மாவட்டங்கள் அரசு பள்ளிகளில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது. கடைசி இடம் (82.92%) ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதிய 3, 43, 296 மாணவ மாணவிகளில், 3, 08, 698 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக அரசு பள்ளிகள் 100க்கு 89.76 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளது. இதேபோல் அரசு உதவிப் பெறும் பண்ணிகள் 95.96 சதவீதமும், தனியார் பள்ளிகள் 99.08 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.
மேலும்,
- ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் - 86.16%
- மாநகராட்சி பள்ளிகள் - 90.08%
- வனத்துறை பள்ளிகள் - 94.87%
- நகராட்சி பள்ளிகள் - 90.54%
- சமூக நலத்துறை பள்ளிகள் - 91.44%
- பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் - 94.82% தேர்ச்சி சதவீதத்தைப் பெற்றுள்ளது.