kanchipuram Pass Percentage, TN 12th Result 2023

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில், காஞ்சிபுரத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 86.46 % - மாக உள்ளது. கடந்தாண்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் 27-வது இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 4 இடங்கள் சரிந்து 31 வது இடத்தையே காஞ்சிபுரம் மாவட்டம் பிடித்துள்ளது. சென்னையின் புறநகர் மாவட்டமாக இருப்பதால் காஞ்சிபுரம் அதிதீவிர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் மாணவர்களின், விகிதத்தில் கடைசி 10 இடங்களில் இருப்பது, பெற்றோர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

பரந்தூர்  அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி 

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 46 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கிராம பகுதியில் செயல்பட்டு வந்த, பரந்தூர்  அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அங்கு பயின்று வந்த 36 மாணவர்கள் 45 மாணவிகள் என மொத்தம் 81 தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.  அங்கு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவன் 553 மதிப்பெண்கள் பெற்று பொருளாதாரம் , கணக்குப்பதிவியல், வர்த்தக பாடப்பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் இப்பள்ளியில் வர்த்தக பாடத்தில் ஆறு நபர்களும்,  கணக்குப்பதிவியல் பிரிவில் ஒரு மாணவரும்,  வரலாற்றில் இரண்டு மாணவர்களும் , பொருளியலில் ஒரு மாணவன் என பத்து மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர்.

 

 

அதிர்ச்சியை ஏற்படுத்திய தேர்வு முடிவுகள்

 

இதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் நகரில் மிகப் பழமையான பள்ளியுமான, டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தேர்வு எழுதிய 133 மாணவர்களில் வெறும் 42 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியின் தேர்ச்சி  31.58 சதவீதமாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் உள்ளிட்ட அனைத்தும் 70 % சதவீதத்திற்கு மேல் உள்ள நிலையில்,  காஞ்சிபுரம் நகரில் உள்ள இப்பள்ளி தேர்ச்சி விகிதம் தேர்வு எழுதிய 4 பேரில் 1 மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது, பாடம் நடத்திய ஆசிரியர்கள் மீது கேள்வி எழுப்பி உள்ளது. இதே வளாகத்தில் உள்ள , ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 109 மாணவிகள் தேர்வு எழுதியதில் 100 பேர் தேர்ச்சி பெற்று அப்பள்ளி 91.74 சதவீதம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தனி கவனம் செலுத்த வேண்டும்

 ஒருபுறம் அரசு  பள்ளியில் மாணவ மாணவிகளை சேர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகமும் அரசும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், இது போன்ற ஒரு சில அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதங்கள், அரசின் நல்ல முயற்சிக்கு பாதகமாக அமையும் என்கிறார்கள் கல்வி ஆர்வலர்கள். கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இது போன்ற தேர்ச்சி விகிதத்தில் மிக மோசமான பள்ளிகளை அடையாளம் கண்டு, சிறப்பு கவனம் செலுத்த செலுத்துவது மட்டுமில்லாமல், இதுகுறித்து ஆசிரியர்களிடமும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையை எழுந்துள்ளது.