தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பாட வாரியாக மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விகிதம் பற்றி காணலாம். 

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளை 8,11,172 மாணவ, மாணவியர்கள் எழுதினர். இதில் 7,39, 539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனிடையே இன்றைய தினம் 11 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. முன்னதாக கடந்த மே 6 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும், மே 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகியிருந்தது.

இதனிடையே இன்று வெளியான 11 வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர்களின் மொத்த தேர்ச்சி விகிதம் 91.17% ஆக அமைந்துள்ளது. இது கடந்தாண்டை விட 0.24 சதவிகிதம் அதிகமாகும். மாணவர்களை விட 7.43% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 241 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு ஜூன் 2 ஆம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தை பார்க்கும்போது கோவை மாவட்டம் முதலிடமும், ஈரோடு இரண்டாமிடமும், திருப்பூர் மூன்றாமிடமும் பெற்றுள்ளது. கடைசியிடம் வேலூர் மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது. இந்த தேர்வுகளை 8,221 மாற்றுத்திறனாளி மாணவர், மாணவியர்கள் எழுதிய நிலையில் அதில் 7,504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 187 சிறைவாசிகள் தேர்வெழுதி 170 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் பாட வாரியாக மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விகிதம் பற்றி காணலாம். 

பாடப்பிரிவுகள்  வாரியாக தேர்ச்சி விகிதம் 

பாடப்பிரிவுகள்  தேர்ச்சி விகிதம் 
அறிவியல்  94.31%
வணிகவியல் 86.93%
கலைப்பிரிவுகள்  72.89%
தொழிற்பாட பிரிவுகள் 78.72%

பாட வாரியாக தேர்ச்சி விகிதம் 

பாடங்கள்  சதவிகிதம் 
இயற்பியல் 97.23%
வேதியியல்  96.20%
உயிரியல்  98.25%
கணிதம்  97.21%
தாவரவியல் 91.88%
விலங்கியல்  96.40%
கணினி அறிவியல்  99.39%
வணிகவியல்  92.45%
கணக்குப் பதிவியல் 95.22%