மகாராஷ்ட்ராவில் வீசிய புழுதி புயலில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
பொதுவாக சாலையோரங்களில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள், கட் அவுட்கள் ஆகியவை பலமாக காற்று அடித்தாலே சரிந்து விழுந்து வாகன ஓட்டிகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் நேற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் புழுதிப்புயல் வீசியதுடன் மழையும் பெய்தது. அங்குள்ள வடாலா பகுதியில் வீசிய புயலில் அங்கிருந்த மரங்கள் சரிந்தன.
இதில் எதிர்பாராத விதமாக கட்கோபர் பகுதியில் ராட்சத இரும்பு பேனர் மொத்தமாக பெயர்ந்து கீழே இருந்த பெட்ரோல் நிலையத்தின் மீது விழுந்தது. அப்போது மழை மற்றும் புழுதி புயலுக்காக ஒதுங்கி நின்ற மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இந்த விபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார், தீயணைப்பு துறையினர், மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
கிட்டதட்ட 70க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.