செங்கல்பட்டு மாவட்டத்தில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையில் 90.85 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 85.75 ஆக உள்ளது. தனியார் பள்ளிகளில் 98.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் 92.36 சதவீதம் பேர் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இருபாலர் பள்ளிகளில் 91.61 % பேரும் பெண்கள் பள்ளிகளில், 94.46% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும் ஆண்கள் பள்ளியில் தேர்ச்சி வீதம் 81.37 எனக் குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்ச்சி 91.17 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.24 சதவீதம் அதிகம் ஆகும். 2023ஆம் ஆண்டு, 90.93 சதவீதம் பேர் பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்தனர்
செங்கல்பட்டு மாவட்ட தேர்வு முடிவுகள்
செங்கல்பட்டு மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 13,203 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதேபோன்று 14,903 மாணவிகள் தேர்வு எழுதினர். மாவட்டம் முழுவதும் 28 ஆயிரத்து 106 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 11,505 மாணவர்களும், 14 ஆயிரத்து 30 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.14 சதவீதமாக உள்ளது. அதுவே மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.14 சதவீதமாக உள்ளது. மொத்தமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 ஆயிரத்து 535 மாணவ, மாணவிகள் பதினொன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் தேர்ச்சி சதவீதமானது 90.85 சதவீதமாக உள்ளது.
கடந்தாண்டு செங்கல்பட்டு மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் 24-வது இடத்தை பிடித்திருந்தது. தற்பொழுது பதினொன்றாம் வகுப்பில் இரண்டு இடங்கள் முன்னேறி 22 ஆவது இடத்தை செங்கல்பட்டு மாவட்டம் பிடித்துள்ளது. இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்திலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட 1.73 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. ஆனால் செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 82.95 ஆக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் 29 வது இடத்தை பிடித்துள்ளது
மாணவர்கள், http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம்.