10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 3 மாணவிகள், 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


2024ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகின. இதில் ஒட்டுமொத்தமாக 91.55 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்வு எழுதிய 8,94264 பேரில், 8,18,743 பேர் (91.55%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர்; 4,22,591 (94.53%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள்: 3,96,152 (88.58%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.


முதலிடத்தில் அரியலூர் மாவட்டம்


தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. அதிகபட்சமாக ஆங்கிலப் பாடத்தில் 99.15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக சமூக அறிவியல் பாடத்தில் 95.74 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 


கணிதப் பாடத்தில் அதிகபட்சமாக, 20,691 பேர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 8 பேரும், ஆங்கிலப் பாடத்தில் 415 பேரும் சென்ட்டம் அடித்துள்ளனர். அறிவியல் பாடத்தில் 5,104 பேரும் சமூக அறிவியல் பாடத்தில் 4,428 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். 


எந்தெந்த மாணவிகள்?


10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் 499 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 


ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த காவிய ஜனனி என்னும் மாணவி, 500-க்கு 499 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இவர், தமிழ் 99, ஆங்கிலம் 100, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என மொத்தம் 500- க்கு 499 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதேபோல திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் தனியார் பள்ளியைச் சேர்ந்த சஞ்சனா அனுஷ், 499 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.


 





தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கொசப்பட்டியைச் சேர்ந்த காவிய ஸ்ரீயா என்னும் தனியார் பள்ளி மாணவியும் மொத்தம் 499 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இந்த மாணவிகள் மூவருமே தமிழ் பாடத்தில் தலா 99 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தலா நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். 


இதையும் வாசிக்கலாம்: 10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பில் 75,521 பேர் தோல்வி: துணைத்தேர்வுக்கு நாளையே விண்ணப்பிங்க! விபரம் இதோ!