அட்சய திரிதியை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது.
முதலில் காலை 6 மணி அளவில், 22 காரட் மதிப்பு கொண்ட தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் விலை ரூ.45 உயர்ந்து ரூ.6,660 ஆக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.90 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் கொண்ட தங்கம் விலை கிராம் ரூ.7,130 ஆகவும், சவரன் ரூ.57,040 ஆகவும் விற்பனையாகிறது.
ஆனால் காலை 8 மணிக்கு மீண்டும் வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு மீண்டும் ரூ.360 உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம், சவரனுக்கு ரூ.53,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராம் ஒன்று ரூ. 45 உயர்ந்து ரூ. 6,705 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வழக்கமாக காலை 9.30 மணிக்கு தங்கம் விலை வெளியிடப்படும். ஆனால் இன்று அக்ஷய திரிதியை முன்னிட்டு காலை 6 மணிக்கு தங்கம் விலை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் காலையில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது மொத்தமாக ரூ. 720 அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு தங்கம் மீது எப்போதுமே தனி ஆர்வம் தான். விதவிதமான டிசைன்கள், புதுபுது மாடல்கள், ஆண்டிக் நகைகள் என ஏராளமான கலெக்ஷன்ஸ் நோக்கி மக்களின் ஆர்வம் உள்ளது. சாதாரன நாட்களில் நகை வாங்குவதை விட தங்கம் வாங்க உகந்த நாள் என அனுசரிக்கப்படுவது அட்சய திரிதியை நாள் தான். இந்த நாளில் நகை கடைகளில் மக்களின் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக காணப்படும்
அந்த வகையில் இன்று அக்ஷய திரிதியை நாள் முன்னிட்டு சென்னையில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர்.
அதன்படி 2024 ஆம் ஆண்டு அட்சய திரிதியை நாள் இன்று (மே 10) அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை (மே 11) மதியம் 2.50 மணி வரை உள்ளது. அதேசமயம் இந்த இரு நாட்களிலும் நகைகள் வாங்க நல்ல நேரம் காலை 5.45 மணி முதல் மதியம் 12.06 வரை குறிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நகைகள் வாங்க முடியாதவர்கள் இந்த நாளின் பிற நேரங்களில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் வாங்க இயலாதவர்கள், இந்நாளில் கல் உப்பு, பஞ்சு, பருப்பு ஆகியவற்றை வாங்கலாம் என கூறப்படுகிறது. இந்த பொருட்களை வாங்குவதால் வீட்டில் அமைதி, வளம், வளர்ச்சி, மகிழ்ச்சி ஆகியவை நிலைத்து இருக்கும் என நம்பப்படுகிறது.