10th Supplementary Exam: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 8.45 சதவீதம் பேர் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு தேதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 


10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 


பள்ளி மாணவர்களின் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டில் இந்த தேர்வை 8,94,264 மாணவ, மாணவியர் எழுதினர். இதில் மாணவிகளின் எண்ணிக்கை: 4,47,061  மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை: 4,47,203.


தொடர்ந்து ஆசிரியர்களைக் கொண்டு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. பின்னர் மதிப்பெண் பதிவேற்றும் பணியும் நடந்து முடிந்தது. இதனிடையே திட்டமிட்டபடி பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10 வெளியாகின. 


75,521 பேர் தோல்வி


இந்த தேர்வை எழுதியவர்களில் 3,96,152 மாணவர்களும், 4,22,591 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் 75,521 பேர் தோல்வியடைந்துள்ளனர். இந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வுக்கு நாளை ( மே 11ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனினும் ஜூலை 2ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.