பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு முடிவுகள்‌ அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று (மே 15) முதல் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதைப் பெறுவது எப்படி என்று காணலாம். 


மாநிலக் கல்வி வாரியத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் படித்த, பத்தாம்‌ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்‌ தேர்வு முடிவுகள்‌ மே 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் எழுதினர். அவர்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள் மற்றும் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். அதாவது 91.55% பேர் தேர்ச்சி பெற்றனர். 


கடந்த ஆண்டு 10ம் வகுப்புபொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றனர்.


தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்


இதற்கிடையே மாணவர்கள் 13.05.2024 முற்பகல்‌ 11.00 மணி முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களைப் பெற்று வருகின்றனர்.


விடைத்தாள்நகல்விண்ணப்பிக்கும்முறை


இந்த நிலையில், பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீடு கோரும்‌ மாணவர்கள்‌ முதலில்‌ விடைத்தாள்‌ நகலுக்கு விண்ணப்பித்து பெற்ற விடைத்தாள்‌ நகலை மாணவர்கள்‌ ஆய்வு செய்து, பின்னர்‌ இத்துறையால்‌ அறிவிக்கப்படும்‌ நாட்களில்‌ மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும்‌.


விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்கள்‌ வழியாகவும்‌ விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் இன்று15.05.2024 ( புதன்கிழமை) காலை 11.00 மணி முதல்‌ 20.05.2024 ( திங்கட்கிழமை) மாலை 5.00 மணி (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) வரை விண்ணப்பிக்கலாம்‌. பத்தாம்‌ வகுப்பு scan copy-க்கு விண்ணப்பிப்பவர்கள்‌ மட்டுமே மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும்‌.


விடைத்தாள் நகல் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறை


விடைத்தாள்‌ நகல்‌ விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும்‌ ஒப்புகைச்‌சீட்டினை மாணவர்கள்‌ பாதுகாப்பாக வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. ஒப்புகைச்‌ சீட்டில்‌ குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப்‌ பயன்படுத்தியே தேர்வர்கள்‌ தங்களது விடைத்தாளின்‌ நகலினை இணையதளம்‌ வழியாக பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.


விடைத்தாளின்‌ நகலினை இணையதளம்‌ வழியாக பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டிய நாள்‌ மற்றும்‌ இணையதள முகவரி பின்னர்‌ வெளியிடப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.