தமிழ் மொழி மீது யாருக்கு அதிக அக்கறை என்னும் விவகாரத்தில் நேருக்கு நேராக விவாதிக்க அண்ணாமலை தயாரா என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சவால் விடுத்துள்ளார். 


அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழிக் கல்வி உள்ளிட்ட சில பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விவகாரத்தில் துணை வேந்தர் செய்தது தவறு என்றும் அது அரசுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவு என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசும்போது, ''அண்ணாமலைக்கு வரலாறும் தெரியாது. இப்போது நடப்பதும் தெரியாது. ஊடகங்களில் வரும் செய்திகளையும் அவர் பார்ப்பதில்லை. தமிழ் மொழிப் பாடத்தைக் கொண்டு வந்தது யார்? திமுகதானே?


மாநில மொழி என்று அவர்கள் சொல்வதே இன்னொரு மொழியைப் புகுத்தத்தான். மும்மொழி கொள்கையை புகுத்துவதற்கான முயற்சியில் பாஜகவினர் ஈடுபடுகின்றனர். 


கர்நாடகத்தில் இருந்து வந்து, ஏதோ கட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார் அண்ணாமலை. தமிழ் மீது உண்மையிலேயே அவருக்கு அக்கறை இல்லை. முதல்வருக்கு இல்லாத அக்கறையா, அண்ணாமலைக்கு வந்துவிட்டது?


இருமொழிக் கொள்கையை ஆதரித்து ஒரு அறிக்கையை அண்ணாமலை வெளியிடச் சொல்லுங்கள். அப்படி செய்தால் அவருக்கு தமிழ் மொழி மீது பற்று இருப்பதாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இது தொடர்பாக அண்ணாமலையை வரச் சொல்லுங்கள். நேருக்கு நேராக விவாதிக்க அவர் தயாரா? நான் தயாராக இருக்கிறேன்''  என பொன்முடி சவால் விடுத்துள்ளார்.


சூரப்பாவிடம் பட்ட பாடு தெரியுமா?


மேலும் பேசிய அமைச்சர் பொன்முடி, ''அண்ணா பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் மற்றும் கட்டிடவியல் பாடப்பிரிவுகள் மட்டுமின்றி, பிற பாடங்களிலும் தமிழ்வழிக் கல்வி அறிமுகம் செய்யப்படும். 


அதிமுக ஆட்சியில் சூரப்பாவிடம் எடப்பாடி பழனிசாமி பட்ட பாடு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோல இல்லாமல், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் சொல்லி, அவர் திரும்பப் பெற்றுள்ளார்.


விரைவில் எல்லாத் துணைவேந்தர்களையும் அழைத்துப் பேச உள்ளோம். இனி வரும் காலத்தில் புதிய பாடப்பிரிவு சேர்ப்பு, நீக்கம் குறித்து, உயர் கல்வித்துறை செயலாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது'' என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


துணை வேந்தர் செய்தது தவறு


மேலும் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் இயந்திரவியல் மற்றும் கட்டிடவியல் பாடப்பிரிவுகள் மூடப்படுவது குறித்து, உயர் கல்வித்துறை செயலாளருக்கோ, அமைச்சராகிய எனக்கோ எதையும் தெரிவிக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர், எங்களுக்கு தெரிவிக்காமல்,
இதை  அறிவித்துள்ளார்.


துணை வேந்தர் இதுபோன்று செய்தது தவறு. அரசுக்கு தெரியாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கே இதுகுறித்துத் தெரியவில்லை. இந்த அறிவிப்பு மிகவும் மோசமானது என்று கூறினோம். இந்த தவறை உணர்ந்து தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடனே அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.