நடிகர் கார்த்தி  நடித்து வரும் ஜப்பான் படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை அவரின் தீபாவளி ரிலீஸ் படங்கள் பற்றி காணலாம். 


ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்த கார்த்தி 


கடந்த 2007 ஆம் ஆண்டு பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் கார்த்தி. முதல் படமே அவரின் அடையாளமாக மாறிப்போனது. தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி, சர்தார் என பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் தமிழ் சினிமா ரசிகர்களின் அனைவராலும் ரசிக்கக்கூடிய பிரபலமாக மாறினார். கார்த்தியின் படங்களை குடும்பமாக சென்று பார்க்கலாம் என்ற நிலையை அவர் உருவாக்கி வைத்து அதன்மூலம் வெற்றியும் பெற்று வருகிறார்.


இப்படியான நிலையில் கார்த்தி இதுவரை 24 படங்களில் நடித்துள்ளார். இதில் 4 படங்கள் மட்டுமே தீபாவளி வெளியீடாக ரிலீசானது. இந்த வரிசையில் 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ஜப்பான் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கார்த்திக்கு கைக்கொடுக்குமா? என்பதை காணலாம். 


ஆல் - இன் - ஆல் அழகுராஜா 


கடந்த 2013 ஆம் ஆண்டு கார்த்தியின் சினிமா கேரியரில் முதல் தீபாவளி வெளியீடாக “ஆல் இன் ஆல் அழகு ராஜா” படம் ரிலீசானது. ராஜேஷ் இயக்கிய இப்படத்தில்  சந்தானம், காஜல் அகர்வால்,ராதிகா ஆப்தே,  பிரபு, சரண்யா, நாசர் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார். டார்க் காமெடி வகையில் ரிலீசான இப்படம் தியேட்டரில் ரசிகர்களை கவர தவறியதால் படுதோல்வி அடைந்தது. ஆனால் டிவியில் ஒளிபரப்பாகும்போது அதிக பார்வையாளர்களைப் பெற்றது. 


காஷ்மோரா


 2016 ஆம் ஆண்டு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2வது தீபாவளி வெளியீடாக “காஷ்மோரா” படம் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 60 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் தோல்வியை தழுவியது. அதேசமயம் கார்த்தியின் கேரக்டர் வெகுவாக பாராட்டப்பட்டது. 


கைதி


2019 ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸாக  கார்த்தி நடிப்பில் வெளியானது “கைதி” படம். லோகேஷ் கனகராஜ்  இயக்கிய இப்படத்தில் நரேன், அர்ஜூன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன், ரமணா என பெரும்பாலும் ஆண் நடிகர்கள் மட்டுமே நடித்திருந்தனர். சாம் சிஎஸ் இசையமைத்த இப்படம் அதே தீபாவளிக்கு வெளியான விஜய்யின் பிகில் படத்துடன் மோதி சூப்பர் ஹிட் ஆனது.  


சர்தார்


கடந்தாண்டு தீபாவளிக்கு கார்த்தியின் “சர்தார்” படம் வெளியானது. இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். ராஷிகண்ணா, லைலா,  ரஜிஷா விஜயன், பாலாஜி சக்திவேல், யூகி சேது உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கார்த்திக்கு மற்றுமொரு வெற்றியை கொடுத்தது. 


ஜப்பான் 


ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் படம் ஜப்பான். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் வரும் 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிகர் கார்த்தி நடித்து வருவதால் ஜப்பான் படமும் வெற்றியை பெறும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.