முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களிலும் குறிப்பாக அவரது தம்பி அசோக்கின் கரூர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


காலையிலேயே கரூர் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள்


மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் உதவியுடன் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கின் இல்லத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், வீட்டில் இருந்த அவரது குடும்ப உறுப்பினர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு, அசோக்கிற்கு போன் செய்து வர சொல்லியுள்ளனர். மேலும், வீட்டில் உள்ள ஆவணங்கள், சொத்து தொடர்பான பத்திரங்கள் இவற்றையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்களை எடுத்து வர சொல்லியுள்ளனர்.



செந்தில்பாலாஜி தம்பி அசோக்


விரைந்து வந்த மேயர் – கரூர் மாநகராட்சி கூட்டம் ரத்து


செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை என்று தெரிந்ததும் இன்று நடைபெறாவிருந்த கரூர் மாநகராட்சி கூட்டத்தை ரத்து செய்துவிட்டு மேயர் கவிதா கணேசன் ராமகிருஷ்ணா நகரில் உள்ள அசோக் வீட்டிற்கு வந்தார். அவர் வந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக திமுகவினரும் அப்பகுதியில் கூடினர்.


 அதிகாரிகள் காரை சேதப்படுத்திய தொண்டர்கள் 


வருமான வரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டும் அவர்கள் வந்த காரை சேதப்படுத்தியும் திமுக தொண்டர்கள் பிரச்னை செய்ததால் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






  முதல்வர் ஊரில் இல்லாத நிலையில் ரெய்டு ; குறிவைக்கப்படும் செந்தில்பாலாஜி


 முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களிலும் குறிப்பாக அவரது சகோதரர் அசோக் இல்லத்திலும் நடைபெறும் சோதனை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



மின்சார துறையில் நிலக்கரி கொள்முதலில் முறைகேடு, டாஸ்மாக் மதுபான விற்பனையில் ஊழல், டெண்டர் விடுவதில் பாரபட்சம் என செந்தில்பாலாஜி மீது அடுக்கடுக்கான புகார்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுகவும் தொடர்ந்து முன் வைத்து வரும் நிலையில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது. கூடுதலாக, வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்துள்ளதாகவும் பல கோடி ரூபாயில் கரூரில் புது வீடு கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.


ஆளுநரிடம் மனு கொடுத்த அதிமுக – பாஜக ; ஐ.டி.ரெய்டுக்கு காரணமா ?


 


விழுப்புரத்தில் விஷ சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு தார்மீக பொறுப்பேற்று மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டும் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் பாஜகவும் அதிமுகவும் நேரடியாக சென்று புகார் பட்டியலை தந்த நிலையில் இப்போது இந்த வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது, ஒருவேளை ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இந்த தகவலை தெரிவித்தபின்தான் இப்படியான சோதனை நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.


ஏற்கனவே, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், அவருக்கு வருமான வரித்துறை மூலம் புதிய சிக்கல் உருவாகியிருக்கிறது.