திறனறி தேர்வு ஒத்திவைப்பு - அரசு தேர்வுகள் இயக்குநர் சேது வர்மா அறிவிப்பு
சென்னை,செப்.17: தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குநர் சேது வர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதை போன்று, தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-23-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 சதவீத அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதத்திற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழக அரசின் 10ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 2022-2-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் (சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்பட) 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதனை தொடர்ந்து இந்த தேர்வானது வருகின்ற அக்டோபர் மாதம் 1ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பல்வேறு தரப்புகளிலிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் 15.10.2022(சனிக்கிழமை) அன்று இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அரசு தேர்வுகள் இயக்குநர் சேது வர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.