பிரியாணி கடையில் தட்டு கழுவும் பணியில் இருந்து, தன் விடாமுயற்சியால் படித்து நீதிபதியாகத் தேர்வாகி உள்ளார் 29 வயது இளைஞரான மொகமது காசிம். 


உத்தரப் பிரதேசம், சம்பல் பகுதியைச் சேர்ந்தவர் மொகமது காசிம். சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்த இவரின் அப்பா, தெருவில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு தட்டு கழுவிக் கொடுக்கும் பணியில் இருந்துகொண்டே படித்து, தேர்வு எழுதி நீதிபதியாக உள்ளார் காசிம். 


விளிம்புநிலைக் குழந்தையாய்ப் பிறக்கும் எல்லோரையும் போலவேதான் காசிமின் வாழ்க்கையும் இருந்தது. சிறு வயதில் அப்பாவோடு சேர்ந்து கடைக்குச் செல்வார் காசிம். தன்னுடைய கிராமத்தில் ஆரம்பக் கல்வியை முடித்தார். 10ஆம் வகுப்பு படிக்கும்போது ஒருமுறை தோல்வியைக் கூடத் தழுவினார். எனினும் அதற்குப் பிறகு சுதாரித்துக்கொண்டார். பின்னர் வார்ஸி ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார்.


அகில இந்திய அளவில் முதலிடம்


தன்னுடைய அம்மாதான் தனக்கு உத்வேகம் என்று கூறும் மொகமது காசிம், படிப்பதை மட்டும் விட்டு விடவில்லை. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பிஏ எல்எல்பி இளநிலை சட்டப் படிப்பில் சேர்ந்து படித்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்எல்எம் முதுகலைப் படிப்பை முடித்தார். 2019ஆம் ஆண்டில், எல்எல்எம் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பெற்றார். 2021ஆம் ஆண்டு யுஜிசி நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இரண்டு பல்கலைக்கழககங்களில் ஆசிரியராகவும் பணியாற்றினார் காசிம்.




தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணைய மாகாண சிவில் சேவைகள் (UPPSC PCS) நடத்தும் சிவில் இளநிலை நீதிபதி தேர்வை (Judicial Services exam) 2022ஆம் ஆண்டு எழுதினார் மொகமது காசிம். இந்தத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், அதில் தேர்ச்சி பெற்று, நீதிபதி பணிக்குத் தேர்வாகி உள்ளார். 


இதையும் வாசிக்கலாம்: School Age : 3 வயதுக்கு முன்னால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சட்டவிரோதம்: நீதிமன்றம் அதிரடி


மாண்புமிகு நீதியரசர்


இதன் மூலம் தெருவோரக் கடையில் தட்டுக் கழுவும் பணியில் இருந்து, நீதி வழங்கும் மாண்புமிகு நீதியரசர் ஆக உள்ளார் மொகமது காசிம். 


இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் அவர் கூறும்போது, ''என்னுடைய அம்மாதான் எப்போதும் எனக்குப் பின்னால் இருந்து ஊக்குவித்துக்கொண்டே இருப்பார்.  நான் பள்ளியில் இடைநிற்க அவர் அனுமதிக்கவே இல்லை. நீங்கள் ஒரு பிரபலத்தின் மகனாகவோ அல்லது அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ இல்லாத பட்சத்தில், கல்வி மட்டுமே ஒரே ஆயுதம். அதன் மூலம்தான் நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன்'' என்று மொகமது காசிம் தெரிவித்துள்ளார். 


இதையும் வாசிக்கலாம்: TNEA Counselling: மாணவர்களே.. பொறியியல் துணைக் கலந்தாய்வு; கல்லூரியைத் தேர்வுசெய்ய இன்றே கடைசி!