இந்திய மாணவர்கள் கல்வி பயில தேர்வு செய்யும் நாடுகளில் அயர்லாந்து முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


கடந்த கல்வியாண்டில் மட்டும் சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அயர்லாந்தில் உள்ள கல்வி நிலையங்களைத் தேர்வு செய்து கல்வி கற்கச் சென்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


பொறியியல், கணினியியல், வணிகம், நர்சிங்,  சமூக அறிவியல் ஆகிய படிப்புகளை இங்கு பயிலச் செய்யும் மாணவர்கள் பெரும்பாலும் தேர்வு செய்கின்றனர். மேலும், சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு, வேளாண் டெக், டேட்டா அனலிடிக்ஸ், ஃஃபைன் டெக், சைபர் செக்யூரிட்டி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சார்ந்த படிப்புகளில் மாணவர்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக அயர்லாந்து அரசு முன்னதாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


சமீபத்தில் டெல்லியில் கல்விக் கண்காட்சி ஒன்றை அயர்லாந்து அரசு நடத்திய நிலையில், ஏராளமான மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பல்வேறு படிப்புகள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்துள்ளனர்.


இந்நிலையில், இந்தக் கண்காட்சியில் அயர்லாந்தைச் சேர்ந்த 16 உயர் கல்வி நிறுவனங்கள் பங்குபெற்றதாகவும், டெல்லியைச் சேர்ந்த சுமார் 350 மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்று கலந்துரையாடியதாகவும் அயர்லாந்து அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தக் கண்காட்சிகள் மாணவர்களுக்கு விசா செயலாக்கத்திலிருந்து கிடைக்கும் திட்டங்கள், தகவல்கள், சலுகைகள், கேம்பஸ் வாழ்க்கை, தங்குமிடம், சர்வதேச மாணவர் ஆதரவு, உதவித்தொகை, கலாச்சாரம் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.


இதுகுறித்துப் பேசிய அயர்லாந்து கல்விக்கான இந்தியா மற்றும் தெற்காசியாவின் பிராந்திய மேலாளர் பாரி ஓ டிரிஸ்கால், “கொரோனாவுக்கு பிந்தைய முதல் கல்விக் கண்காட்சி இது, இது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 
 
 படிப்புகள், தொழில் முன்னேற்றங்கள் மற்றும் சலுகைகள் ஆகியவை குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அயர்லாந்தின்  முன்னணி உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் நேரடியாகக் கலந்துரையாட இந்தக் கண்காட்சிகள் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகின்றன.


மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தைப் பற்றிய முடிவுகளை எடுக்கவும், வாழ்க்கையில் சிறந்த வெற்றியைப் பெறவும் உதவுவதே எங்கள் குறிக்கோள். அவர்களின் நோக்கங்களை அதிக அளவில் நிவர்த்தி செய்ய முடிந்தது என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.