பிளஸ் 2 தமிழ்ப்பாடத் தேர்வை 50,000 மாணவர்கள் எழுதாதது அதிர்ச்சி  அளிப்பதாகவும் கலந்தாய்வு மூலம் அச்சத்தைப் போக்கி தேர்வு எழுதச் செய்ய வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார். 


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:


''தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடத் தாளை  50,674 மாணவர்கள் எழுதவில்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.மொத்த மாணவர்களில் சுமார் 7% மாணவர்கள் தேர்வை எழுதாதது இதுவே  முதல் முறை. இது அதிர்ச்சியளிக்கிறது!


கொரோனா பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதாதது,  தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்படாதது போன்றவற்றால்  ஏற்பட்ட அச்சம் ஆகியவை தான் பெரும்பான்மையான 12-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் தேர்வையே எழுதாததற்கு காரணம் என்று  உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்!


அச்சம் காரணமாக அடுத்து வரும் தேர்வுகளையும் இந்த மாணவர்கள் எழுதாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அது அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால்,  இந்தப் போக்கிற்கு முடிவு கட்ட தமிழக அரசின் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!


தமிழ் மொழிப்பாடத்தாள் தேர்வை எழுதாத மாணவர்களின் பட்டியலை வட்ட அளவில் தயாரித்து, அந்த மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள்  அடுத்து வரும்  தேர்வுகளை தவறாமல்  எழுதுவதை  அரசு உறுதி செய்ய வேண்டும்''


இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வை வழக்கமான மாணவர்களோடு, தனித் தேர்வர்கள்‌ 23,747 பேர், மாற்றுத்‌ திறனாளிகள் 5,206 பேர், 90 சிறைவாசிகள் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுதினர். புதுச்சேரி மாணவர்கள் 14,710 பேர் சேர்த்து, இந்த எண்ணிக்கை 8,51,303 ஆக இருந்தது.


இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 50,674 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.  


தேர்வு அட்டவணை


முதல் நாளான நேற்று (மார்ச் 13ஆம்தேதி )மொழித்தாள் தேர்வு நடைபெற்றது. பின்,


மார்ச் 15ஆம் தேதி ஆங்கிலம்,


மார்ச் 17- தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி


மார்ச் 21 - இயற்பியல், பொருளாதாரம்


மார்ச் 27 - கணிதவியல், விலங்கியல், நர்சிங்


மார்ச் 31- உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம்


ஏப்ரல் 3ஆம் தேதி- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் என அந்தந்தப் பாடத்திற்கான தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாம்: TN 12th Exam: அதிர்ச்சி.. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,674 மாணவர்கள் ஆப்சென்ட்; காரணம், தீர்வுகள் என்ன?


12th Exam: பிளஸ் 2 பொதுத் தேர்வு; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆப்சென்ட்; முறைகேடு செய்த 2 பேர்!