பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று (மார்ச் 14) தொடங்கிய நிலையில் தேர்வு எழுத 8.51 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். எனினும் மொழிப்பாடத் தேர்வில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் கல்வித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   
 
இதற்காக காரணங்கள் குறித்தும் தீர்வுகள் பற்றியும் அரசுப்பள்ளி ஆசிரியரும் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான உமா மகேஸ்வரி ABP Naduவிடம் விரிவாகப் பேசினார். 


''6ஆம் வகுப்பில் இருந்தே இந்த பிரச்சனை தொடங்குகிறது. முன்பெல்லாம் நேரடியாக வருகைப் பதிவேட்டை நிர்வகிக்கும் வரை, 2, 3 மாதங்கள் பார்ப்பார்கள். மாணவர்கள் வரவில்லையெனில் பெயரை எடுத்துவிடுவார்கள். ஆனால் இப்போது எமிஸ் செயலியில் அவ்வாறு செய்வதில்லை. பள்ளிக்கு ஒரு நாள் வந்தால்கூட பெயர் இருக்க வேண்டும் என்கிறார்கள். 




இடை நிற்றல் ஏன்?


கொரோனா கால கட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தின் நீட்சியாக இன்றும்  ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கு வர விருப்பமின்றி இருக்கின்றனர். அத்துடன் மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணங்கள், மாணவர்கள் வேலைக்குச் செல்வது உள்ளிட்ட காரணங்களாலும் இடை நிற்றல் ஏற்படுகிறது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைக் கையாள்வதில், அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதில் மிகப்பெரிய அளவில் சவால்களை எதிர்கொள்கின்றனர். பெற்றோர்களை ஏமாற்றி, பள்ளிக்கு வருவதுபோல் வந்துவிட்டு வெளியே போய் போதை, குடிப் பழக்கங்களுக்கு ஆளாவது, மாணவர்கள்- மாணவிகள் சேர்ந்து சுற்றுவது ஆகியவற்றையும் காண முடிகிறது. வேலைக்குச் சென்று கையில் காசு பார்த்துவிட்டு, பள்ளியைத் தவிர்ப்பதும் உண்டு.


பள்ளிக்கே வராமல் பொதுத் தேர்வுகளுக்கு மட்டும் வந்துசெல்லும் குழந்தைகளும் உண்டு. இந்த சூழலில் ஆன்லைனை மட்டுமே நம்பாமல் நேரடியாக பள்ளிக்குச் சென்று பார்த்தால்தான் கள எதார்த்தம் புரியும். இதைச் செய்யாமல் எல்லாமே சரியாக இருக்கிறது என்று அரசு சொல்வதுதான் பிரச்சினை. 


இப்படிப்பட்ட சூழலில் எத்தனை குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை என்று யாராவது கேட்டால், கல்வித்துறை எமிஸ் கணக்கைக் காட்டும். ஒரு குழந்தைகூட பள்ளிக்கு வராமல் இல்லை என உறுதியாகச் சொல்லும். நாங்கள் இல்லத்திற்குச் சென்று கல்வி தருவோம் என்று சூளுரைப்பார்கள். கள எதார்த்தத்தைப் பேசி தீர்வை நோக்கி நகர இங்கு எவருக்கும்  நேரமில்லை.


என்னதான் தீர்வு?


முதலில் வகுப்பறைகளில் உரையாடல் சாத்தியப்பட வேண்டும். ஆசிரியர்கள் அதிகாரத்தை விடுத்து, அன்பைக் காட்ட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்ற முக்கோண உறவு இடைவெளி இல்லாமல் இருக்க வேண்டும். பெற்றோர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை அரசு புகட்ட வேண்டும். 


அதேபோல ஆசிரியர்கள் மாணவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்களைக் கற்பித்தல் வேலையை மட்டும் செய்யவிட வேண்டும். பிற எழுத்து, நிர்வாகப் பணிகளுக்குத் தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும். மேல்மட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் உத்தரவுகளை மட்டுமே பிறப்பிக்காமல், அடிமட்டத்தில் உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்து, தீர்வு காண முயல வேண்டும்'' என்று  அரசுப் பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.


மாணவர்களே நாட்டின் எதிர்காலம் என்பதை உணர்ந்து அரசும் கல்வித்துறையும் செயல்பட வேண்டும்.