மாணவர்கள் 2024- 2025 கல்வியாண்டு முதல்‌ பள்ளி , கல்லூரி மாணவர்கள்‌ உபயோகிக்கும்‌ டிபன்‌ பாக்ஸ்‌, வாட்டர்‌ பாட்டில்‌ போன்றவற்றை பிளாஸ்டிக்கால்‌ பயன்படுத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. 


இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநர் (நாட்டு நலப்பணி) சசிகலா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:


‘’தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக்‌ உபயோகிக்கக்‌ கூடாது என்று ஆணையிட்டுள்ளது. இந்த நிலையில்‌ 2024- 2025 கல்வியாண்டு முதல்‌ பள்ளி , கல்லூரி மாணவர்கள்‌ உபயோகிக்கும்‌ டிபன்‌ பாக்ஸ்‌, வாட்டர்‌ பாட்டில்‌ போன்றவற்றை பிளாஸ்டிக்கால்‌ பயன்படுத்தக்கூடாது என்று சிசிஐ எனப்படும் இந்திய கன்ஸ்யூமர் ஃபெடரேஷன் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.


கொடிய நோயான கேன்சர்‌ வரும் அபாயம்


அவ்வாறு பயன்படுத்தினால், அதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்திட ஆணையிட வேண்டும்‌ எனவும்‌, பிளாஸ்டிக்‌ டிபன்‌ பாக்ஸ்‌, பிளாஸ்டிக்‌ வாட்டர்‌ பாட்டில்‌ போன்றவை‌ மாணவ மாணவிகளுக்கு பல நோய்களை உருவாக்கக் கூடியதாவும்‌ மேலும்‌ கொடிய நோயான கேன்சர்‌ வரக்கூடிய நிலையில்‌ உள்ளதாகவும் மனுவில்‌ குறிப்பிடப்பட்டுள்ளது.


இதை அடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள்‌, நடுநிலைப் பள்ளிகள்‌, உயர்நிலைப் பள்ளிகள்‌ மற்றும்‌மேல்நிலைப் பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்கள்‌ தன் சுத்தம்‌, பள்ளி வளாகத்‌ தூய்மை, பள்ளியின்‌ சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல்‌, கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல்‌, மறுசுழற்சி முறைகளின்‌ முக்கியத்துவத்தை உணர்த்துதல்‌, நெகிழி பயன்பாட்டைக் குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப்‌ பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும்‌ நடவடிக்கைகள்‌, பள்ளி காய்கறி தோட்டம்‌ அமைத்தல்‌ ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ நோக்கத்தில்‌ 'எங்கள்‌ பள்ளி மிளிரும்‌ பள்ளி! என்ற திட்டத்தின்‌ மூலமாக பிளாஸ்டிக்கால்‌ ஏற்படும்‌ தீங்குகளை மாணவர்களுக்கு அறிவுத்த வேண்டும்’’ என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


சுற்றுச்சூழல்‌ மன்றம்‌ மூலமாகத் தெரிவிக்கப்பட வேண்டும்


மேலும்‌ ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திலும்‌ பள்ளி மாணவர்கள்‌கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ மன்ற செயல்பாடுகள்‌ வழியாக ஒரு முறை பயன்படுத்தப்படும்‌ பிளாஸ்டிக்கினால்‌ ஏற்படும்‌ நோய்கள்‌ குறித்து விவரம்‌ சுற்றுச்சூழல்‌ மன்றம்‌ மூலமாக மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.