புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இனி வாரத்தில் 5 நாட்கள் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.


புதுச்சேரி சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளித்து பேசியதாவது:


சட்டம் - ஒழுங்கு ; பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை


சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. குற்றங்கள் குறைந்துள்ளது. காவல் துறையில் 635 காவலர்கள், 500 ஊர்க்காவல் படையினர் நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஊர்க்காவல் படையில் பணிபுரியும் பெண்களுக்கு 6 மாத காலம் பேறுகால விடுப்பு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் கடலோர ஊர்க்காவல் படை வீரர்கள்-200, ஓட்டுநர் நிலை-3 -7, டெக் ஹண்ட்லர்-29, சமையல்காரர்கள்-17, ரேடியோ டெக்னிஷியன்-12 என 265 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரிக்கலாம்பாக்கத்தில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் விதமாக 19 இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படவுள்ளது.


வாரம் 5 நாட்களும் சிறுதானிய சிற்றுண்டி


145 தொடக்கப்பள்ளி ஆசிரியர், 340 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 107 கான்ட்க்ரஸ் பணியிடங்கள் தகுதி அடிப்படையில் விரைவில் நிரப்பப்படும். ஆசிரியர்களின் வரைவு இடமாறுதல் கொள்கைக்கு பங்குதாரர்களின் கருத்துகள் கோரப்படும். கடந்தாண்டு புதுச்சேரி அரசு வாரம் இருமுறை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய பிஸ்கட், மிட்டாய் ஆகியவற்றை மாலை சிற்றுண்டியாக வழங்கியது.


மாணவர்களின் ஊட்டச்சத்தினை அதிகரிக்கும் பொருட்டு வாரம் 5 நாட்களும் சிறுதானிய பிஸ்கட், சிறுதானிய மிட்டாய், வேர்க்கடலை மிட்டாய், எய் மிட்டாய், கொண்டை கடலை மிட்டாய், பொட்டு கடலைமிட்டாய் ஆகியவை மாலை சிற்றுண்டி வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது. காரைக்கால் மற்றும் மாஹேவில் நடப்பு நிதியாண்டில் நவீன மைய சமையல் கூடம் அமைக்கப்படும்.


மாணவர்களுக்கு காலணி மற்றும் பள்ளி பைகள்


அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவர்களுக்கு காலணி மற்றும் பள்ளி பைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வுக்கு தயாராகும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணை கற்றல் கையேடு கல்வித்துறை மூலம் வழங்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும் நவீனமயமாக்கப்பட்ட தீ அணைக்கும் கருவிகள் வழங்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் மதிய உணவு உண்பதற்காக உணவுக்கூட அறை கட்டப்படும்.


இலவச மருத்துவ கல்வி


11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட் தவிர கியூட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும். அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ பயிற்சி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். சென்டாக் மூலம் அரசு மற்றும் சொசைட்டி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு 100 சதவீத பயிற்சி கட்டணம் தள்ளுபடி செய்து, இலவச கல்வி வழங்கப்படும்.


2024-25-ம் கல்வி ஆண்டு முதல் சென்டாக் மூலம் அனுமதிக்கப்பட்ட பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், கலை, அறிவியல், வேளாண், சட்டம் போன்ற பிற பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்கு காமராஜர் நிதியதவி திட்டம் நீட்டிக்கப்படும். அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான திட்டம் தயாராகி வருகிறது. அதேபோல், அரசு, சொசைட்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான முன்மொழிவுகள் தயாராகி வருகிறது என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.