உலகின் வலுவான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. இந்தியா தனது பாதுகாப்பு அம்சங்களை மேலும் பெருக்கிட ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என முப்படைகளும் அதற்கான முன்னெச்சரிககை நடவடிக்கைகளிலும், பாதுகாப்பு பணியிலும் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றன.


கௌரவ் சோதனை வெற்றி:


இந்த நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. கவுரவ் என்பது 1,000 கிலோ எடையுள்ள வான்வழி வெடிகுண்டு ஆகும், இது நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. தொலைதூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் விமான சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இதன் மூலம் 1000 கிலோ கிராம் கொண்ட வெடிகுண்டை இலக்கை நோக்கி கொண்டு சென்று எதிரிகளை தாக்க முடியும். இந்த தொலைதூர தாக்குதலுக்கான சோதனையான கௌரவ், சுகோய் 30 எம்.கே.ஐ. ஜெட்டில் இருந்து ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. 


இதன் மூலம் எவ்வளவு தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்க முடியும். இதன் மூலமாக இலக்கை ஜி.பி.எஸ். உதவியுடன் மிக துல்லியமாக கணித்து தாக்க முடியும். இந்த கௌரவ் ஹைதரபாத்தில் உள்ள ஆர்.சி.ஐ. மையத்தில் வடிவமைக்கப்பட்டது.


பாதுகாப்பு தீவிரம்:


இந்த சோதனைக்காக ஒடிசாவில் உள்ள வீலர் தீவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அங்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கௌரவ் மிக துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த சோதனை நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையின் மூத்த விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்பட்டது. இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் விஞ்ஞானிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். அவர் இதுதொடர்பாக, கூறியிருப்பதாவது, ஆயுதப் படைகளின் திறனை மேலும் வலுப்படுத்துவதற்காக உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் நாட்டின் முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று அவர் குறிப்பிட்டார்.


இந்தியாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கி வருகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் நாடுகள் இந்தியாவுடனான அவ்வப்போது மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. இதன்காரணமாக, இந்தியா தனது எல்லைப் புறத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவும், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாடுகளுக்கு சவால் விடும் விதமாக இதுபோன்ற சோதனைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.