எமிஸ் தளத்தில் பதிவு செய்த மாணவர்களின் பட்டியல் மட்டுமே நலத்திட்டங்களுக்குக் கணக்கில் கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், எமிஸ் தளத்தில் பதிவு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக இதுகுறித்துப் பள்ளிக்‌ கல்வி ஆணையரகம் சார்பில், தொழில் கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், ’’அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும்/ பகுதி நிதி உதவி பெறும்‌ உயர்‌நிலை, மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ / மாணவியரின்‌ எண்ணிக்கை எமிஸ் எனப்படும் கல்வியியல்‌ மேலாண்மைத்‌ தகவல்‌ மையத்தில்‌ (Education Management Information System) பதிவு செய்யப்பட்டுள்ளது.  


இந்த எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌ 2023-2024 கல்வியாண்டிற்கு அனைத்து வகை நலத்திட்டங்களும்‌ மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டி உள்ளது. இதனால்‌ முதன்மைக் கல்வி அலுவலர்கள்‌ இதன் ‌மீது தனி கவனம்‌ செலுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ பள்ளிகளில்‌ உள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையினை சரிபார்க்க வேண்டும். அதில்‌ வேறுபாடு இருப்பின்‌ அதனையும்‌ எமிஸ்-ல்‌ டிசம்பர் 12ஆம் தேதிக்குள்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.


நலத் திட்டங்களுக்கான தேவைப் பட்டியல்


இனி வருங்காலங்களில்‌ முதன்மைக் கல்வி அலுவலரால்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட மாணவர்களின்‌ எண்ணிக்கை மட்டுமே, சார்ந்த நலத் திட்டங்களுக்கான தேவைப் பட்டியலாக எடுத்துக் கொள்ளப்படும்‌’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் எமிஸ் தளத்தில் பதிவு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர்  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்‌ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 2022 - 2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ தொடர்பான பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல்‌ தயாரிக்கும்‌ பொருட்டு, அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளித்‌ தலைமையாசிரியர்களும்‌ 14.11.2022 முதல்‌ 12.12.2022 வரையிலான நாட்களில் எமிஸ் தளத்தில்‌ தங்கள்‌ பள்ளியில்‌ பயிலும்‌ பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பதினோராம்‌ வகுப்பு மாணவர்களின்‌ பெயர்‌, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து, திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.




அவகாசம் நீட்டிப்பு


தற்போது சில பள்ளிகளின்‌ தலைமையாசிரியர்கள்‌ மேற்குறிப்பிட்ட பணியினை மேற்கொள்வதற்கு கூடுதல்‌ கால அவகாசம்‌ கோரியதால்‌, எமிஸ்  தளத்தில்‌ பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பதினோராம்‌ வகுப்பு மாணவர்களின்‌ விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள்‌ செய்யும்‌ பணியினை மேற்கொள்ள 19.12.2022 வரை மேலும்‌, கூடுதலாக கால அவகாசம்‌ வழங்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பணிகளை எமிஸ் தளத்தில்‌ மேற்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பாகும்‌.


எனவே, முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌, தங்கள்‌ ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளித்‌ தலைமையாசிரியர்களுக்கும்‌ மேற்குறிப்பிட்ட விவரத்தினை தெரிவித்து, எமிஸ் தளத்தில்‌ பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பதினோராம்‌ வகுப்பு மாணவர்களின்‌ பெயர்‌, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து, திருத்தந்களை மேற்கொள்ளும்‌ பணியினை 19.12.2022-க்குள்‌ நிறைவு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.