பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம்

பள்ளி மாணவர்களுக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற்றது. இதில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வருகிற 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து உயர்கல்வியில் சேர மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிப்பது எப்படி.? என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அண்ணா பல்கலை கழகத்தின் வளாக கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகள்,அரசு, அரசு உதவி பெறும் , தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள பிஇ, பிடெக் , பி ஆர்க்  படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று (மே 3 ந் தேதி )முதல் ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழில்நுட்ப பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. 

 ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கான அசல் சான்றிதழ்களை ஜூன் 6-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இளநிலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 5ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், விண்ணப்பம் செய்த மாணவர்களின் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் ஜூன் 8 ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சரிபார்க்கப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Continues below advertisement

மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூன் 29ஆம் தேதி வெளியிடப்படும் . அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தரவரிசை பட்டியலில் ஏதாவது மாற்றம் இருந்தால் ஜூன் 30-ம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதிக்குள் குறைகளை  தெரிவித்தால் சரி செய்து தரப்படும் எனவும் தமிழ்நாடு தொழில்நுட்ப மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் அறிவித்துள்ளார். 

விண்ணப்பிப்பது எப்படி.?

  • பிஇ,பிடெக்,பிஆர்க்  கலந்தாய்வில் கலந்து கொள்ள ஆன்லைன் மூலமாக  3.5.2026 முதல் 2.6.2026 வரை விண்ணப்பிக்கலாம் .
  • தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகப் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைகழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்வதற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
  • www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் .
  • விண்ணப்பப் பதிவு  கட்டணமாக  OC,BC,BCM,MBC,DNC பிரிவினர்க்கு ரூ.500ம், SC,SCA, ST பிரிவினருக்கு ரூ.250  ஆகும்.

110 இடங்களில் பொறியியல் சேர்க்கை சேவை மையம்

இணையதள வசதி இல்லாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 110 இடங்களில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதன் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு

மாணவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது.1800-425-0110 என்ற எண்ணிலும், tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.