இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரி, வேலைக்கான தேர்வெழுத அனுமதி அளித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னணி
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு மகளிர் கல்லூரிக்கு, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக உடுப்பி, குந்தாப்பூர் பியுசி கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு, வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வர இரண்டு நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் வாயிற்கதவுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மத ரீதியான அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூறி பந்தார்கர் கல்லூரி ஆண் மாணவர்கள், இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கழுத்தில் காவி நிறத் துண்டை அணிந்து வந்தனர். இதற்கிடையே இந்து மாணவிகளும் கழுத்தில் காவி வண்ணத் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அதேபோல ஜெய்ஸ்ரீ ராம் என்று மாணவர்கள் முழக்கமிட, மாணவி ஒருவர் அல்லாஹூ அக்பர் என்று முழக்கமிட்டது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து, மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இதற்குப் பின்னணியில் கர்நாடகத்தை ஆண்ட பாஜக அரசு இருந்ததாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரி, வேலைக்கான தேர்வெழுத அனுமதி அளித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைவரின் சுதந்திரத்தையும் கணக்கில் கொண்டு முடிவு
இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் சுதாகர் கூறும்போது, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரி, வேலைகளுக்கான தேர்வுகளை எழுதலாம். இதில் நிறையப் பேர் பிரச்சினைகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அனைவரின் சுதந்திரத்தையும் கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வையும் ஹிஜாப் அணிந்துகொண்டு எழுதலாம். மாணவர்களும் மாணவிகளும் தங்களுக்கு உகந்த ஆடைகளை அணிந்துகொண்டு தேர்வை எழுதலாம் என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு எதிர்க் கட்சியான பாஜக மற்றும் வலதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
முன்னதாக நாட்டிலேயே முதல்முறையாக கர்நாடக மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. பாஜக அரசு அதைக் கொண்டு வந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு கர்நாடக காங்கிரஸ் அரசு அதை நீக்கியது. மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை கொண்டு வரப்படும் என்று அறிவித்து, குழு அமைத்தது குறிப்பிடத்தக்கது.