திருப்பத்தூரில் மாநில அளவிலான தேசிய மாணவர் படை மாநாடு தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. இதில், 600-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

Continues below advertisement

திருப்பத்தூர் மாவட்டம் நெஞ்சக் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பிளாட்டினம் ஜூப்ளி விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான தேசிய மாணவர் படை (NCC) மாநாடு டிசம்பர் 04, தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள இருபதிற்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

மாநாட்டின் சிறப்பு விருந்தினராக சேலம் 12 தமிழ் நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படை பிரிவு கமாண்டிங் அதிகாரி கர்னல் ராஜீவ் குமார் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இவர், இராணுவம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பாதுகாப்பு துறைகளில் உள்ள பணி வாய்ப்புகள் குறித்து விரிவான விளக்கத்தையும், மாணவர்கள் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

Continues below advertisement

அவரை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 12 தமிழ் நாடு பட்டாலியன் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரகாஷ் அவர்கள், இராணுவத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு வழங்கப்படும் பணி முன்னுரிமை, ஊதிய உயர்வு, பயிற்சி சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை எளிமையான முறையில் விளக்கினார்.

மேலும், இம்மாநாட்டிற்கு கல்லூரி செயலர் அருட்தந்தை பிரவீன் பீட்டர்  தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர். அதேபோல், கல்லூரி முதல்வர் அருட்தந்தை மரிய ஆன்டனி ராஜ் தலைமை உரையாற்றி, பெருமளவில் கலந்து கொண்ட NCC மாணவர்களுக்கு வரவேற்பு தெரிவித்தார்.

பின்பு கூடுதல் முதல்வர் அருட்தந்தை தியோபில் ஆனந்த  வாழ்த்துரை வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மாநாட்டின் முழு ஏற்பாடுகளையும் கல்லூரியின் தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினன்ட் சிவகுமார், மாணவ ஆலோசகர்கள் முனைவர் சைலஜா, முனைவர் ஏஞ்சலின் மேரி ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கருத்தரங்குகள், உரையாடல்கள், அறிவுப் பகிர்வுகள் நடைபெற்றன.