மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்து, மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்தது. குறிப்பாகத் தமிழ்நாட்டின்‌ வரலாற்று மரபு, நிலைமை, எதிர்காலக்‌ குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத்‌ தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை வகுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் குழு அமைக்கப்பட்டது. குழுவின்‌ தலைவராக புதுடெல்லி உயர் நீதிமன்ற முன்னாள்‌ தலைமை நீதிபதி முருகேசன்‌  நியமிக்கப்பட்டார். இக்குழுவானது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள்‌ தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் குழுவின் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு இணைந்து கல்விக் கொள்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.


என்ன சிறப்பு அம்சங்கள்?


மாநிலக்‌ கல்விக்‌ கொள்கையை உருவாக்க‌ பொதுமக்கள்‌, கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள்‌, ஆசிரியர்கள்‌, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்‌, மாணவர்கள், பெற்றோர்கள்‌ மற்றும் தனியார்‌ கல்வி நிறுவனத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ ஆகியோரிடமிருந்து கருத்துருக்கள்‌ மற்றும்‌ ஆலோசனைகள்‌ பெறப்பட்டன. இதில் இருந்து பரிந்துரைகளைத் தொகுத்து, மாநில கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. 


இதில் தமிழ்நாட்டுக்கென்ற தனித்த கல்விக் கொள்கைகள் இடம்பெற்றுள்ளன. அவை என்னென்ன?


* மாணவர்களுக்கு 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது.


* மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் இருக்கக்கூடாது. 


* கல்லூரி சேர்க்கையின்போது 12ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11ஆம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும்.


* தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும்.


* 5 வயது பூர்த்தியான மாணவர்கள் 1ஆம் வகுப்பில் சேரலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


2021- 22ஆம்‌ ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்‌ “தமிழ்நாட்டின்‌ வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக்‌ குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத்‌ தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை ஒன்றை
வகுப்பதற்கு, கல்வியாளர்கள்‌ மற்றும்‌ வல்லுநர்களைக்‌ கொண்ட உயர்மட்டக்‌ குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்‌'” என அறிவிக்கப்பட்டிருந்தது.


மாநிலக்‌ கல்வி கொள்கை தயாரிக்க தமிழ்நாடு அரசால்‌ அமைக்கப்பட்ட குழு இன்றையதினம்‌ தமிழ்நாடு முதலமைச்சரிடம்‌ தனது அறிக்கையினை சமர்ப்பித்தது.


இந்நிகழ்வின்போது, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா, குழுவின்‌ உறுப்பினர்கள்‌ - பேராசிரியர்‌ இராம சீனுவாசன்‌, எழுத்தாளர்‌ எஸ்‌.இராமகிருவ்ணன்‌, பேராசிரியர்‌ சுல்தான்‌ அகமது இஸ்மாயில்‌, முனைவர்‌
அருணா ரத்னம்‌, ஜெயஸ்ரீ தாமோதரன்‌, துளசிதாசன்‌, டி.எம்‌.கிருஷ்ணா, இரா.பாலு, முனைவர்‌ ஃப்ரீடா ஞானராணி, பேராசிரியர்‌ பழனி, குழுவின்‌ உறுப்பினர்‌ செயலர்‌ முனைவர்‌ ஏ. கருப்பசாமி, பள்ளிக்கல்வித்‌ துறை செயலாளர்‌ குமரகுருபரன்‌, பள்ளிக்கல்வித்‌ துறை இயக்குநர்‌ கண்ணப்பன்‌ மறறும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌
உடனிருந்தனர்‌.