பள்ளி செல்லாத குழந்தைகளை ஆசிரியர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கணக்கெடுக்க வேண்டும் என்றும் குழந்தைகள் அருகாமையிலுள்ள பள்ளிகளில்‌ உடனடியாக சேர்க்கப்பட வேண்டும் எனவும் தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


2023-24ஆம்‌ ஆண்டில்‌ 6 முதல்‌ 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள்‌ (மாற்றுத்திறனுடைய குழந்தைகள்‌ மற்றும்‌ இடம்‌ பெயர்ந்து வரும்‌ தொழிலாளர்களின்‌ குழந்தைகள்‌ உட்பட) கண்டறிதல்‌, வகுப்பு மாற்ற செயல்பாடுகள்‌ (Transition of students from current class to next class) மற்றும்‌ ஆரம்பக்‌ கல்வி பதிவேடு புதுப்பித்தல்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 


இந்தப் பணியினை அனைத்து மாவட்டங்களிலுள்ள பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌,ஆசிரியர்கள்‌, ஆசிரியப்‌ பயிற்றுநர்கள்‌, அங்கன்வாடி பணியாளர்கள்‌, கல்வி தன்னார்வலர்கள்‌, சிறப்புப்‌ பயிற்றுநர்கள்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ ,இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்கள்‌ , தொண்டு நிறுவனங்கள்‌, தொடர்புடைய பிற துறை அலுவலர்கள்‌ இணைந்து கணக்கெடுப்பு மற்றும்‌ ஆரம்பக்‌ கல்விப்‌ பதிவேடு புதுப்பித்தல்‌ பணியினை நடத்த வேண்டும்‌.


கணக்கெடுப்பு பணியினை தொடங்குவதற்கு முன்பு மாவட்டத்திலுள்ள அனைத்து குடியிருப்பு விவரங்களை ஊரக வளர்ச்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய துறையினரிடமிருந்து பெற்று இறுதி செய்ய வேண்டும்‌. மேலும்‌ புதிய குடியிருப்புகள்‌ மற்றும்‌ ஏற்கனவே செய்வதற்காக கொடுக்கப்பட்ட குடியிருப்பு பட்டியலை வட்டாரத்திற்கு அனுப்பி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும்‌.


’’ * மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும்‌ எந்தவொரு குடியிருப்பும்‌ விடுபடாமல்‌ வீடுவாரியாகக் கணக்கெடுப்பு பணி நடை பெற வேண்டும்‌. இதில்‌ 6 முதல்‌ 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிதல்‌ வேண்டும்‌.


* ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ இடம்‌ பெயர்ந்த குடும்பத்தைச்‌ (Migrant Labourers) சேர்ந்த அனைத்து பள்ளி செல்லாக் குழந்தைகளின்‌ எண்ணிக்கையை மிகச்‌ சரியாக, எந்த ஒரு குழந்தையும்‌ விடுபடாமல்‌ கண்டறிந்து பதிவு செய்யப்பட வேண்டும்‌.




* நடைபாதையில்‌ வசிப்பவர்கள்‌, மேம்பாலங்களின்‌ கீழ்‌ வசிக்கும்‌ வீடற்றவர்கள்‌, போக்குவரத்து சிக்னலின்‌ இடையே காணப்படும்‌ விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ வெளி மாநிலங்களிருந்து இடம்‌ பெயர்ந்தவர்கள்‌ உள்ள பகுதிகளில்‌ இருக்கும்‌ குடும்பங்களிலும்‌ பள்ளி செல்லா குழந்தைகள்‌ உள்ளனரா என்பதனை கண்டறிதல்‌ வேண்டும்‌. வீடுவாரியான கணக்கெடுப்பில்‌ குறிப்பாக இரயில்‌ நிலையம்‌, பேருந்து நிலையம்‌, உணவகங்கள்‌, பழம்‌, பூ மற்றும்‌ காய்கறி அங்காடி மற்றும்‌ குடிசைப்‌ பகுதிகள்‌, கடலோர மாவட்டங்களிலுள்ள கரையோர பகுதிகளில்‌ வாழும்‌ மீனவக் குடியிருப்பு பகுதிகள்‌, விழாக்கள்‌ நடைபெறும்‌ பகுதிகளில்‌ சிறப்பு கவனம்‌ செலுத்த வேண்டும்‌.


* மேலும்‌, சந்தைகள்‌, ஆற்றங்கரையோர குடியிருப்பு பகுதிகள்‌, பேருந்து நிலையங்கள்‌, சுற்றுலாத் தளங்கள்‌, செங்கல்‌ சூளைகள், கட்டுமானப்‌ பணிகள்‌, அரிசி ஆலை, கல் குவாரி, மணல்‌ குவாரி, தொழிற்சாலைகள்‌ மற்றும்‌ விவசாயம்‌ போன்றவற்றில்‌ பணிபுரிய பல்வேறு மாநிலங்களிலிருந்து / மாவட்டத்திலிருந்து தொழில்‌ நிமித்தமாகத் தமிழகத்திற்கு வருகின்றனர்‌. குறிப்பாக தொழிற்சாலை, மார்க்கெட்‌ பகுதிகளில்‌,கணக்கெடுப்பு நடத்தும்‌போது குழந்தை தொழிலாளர்‌ நலத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை  மற்றும்‌ காவல்‌ துறையுடன்‌ இணைந்து ஆய்வு நடத்த வேண்டும்‌.


* பள்ளி செல்லா குழந்தைகளின்‌ கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சியரின்‌ தலைமையில்‌ பிற துறை அலுவலர்களுடன்‌ கலந்தாலோசனைக்‌ கூட்டம்‌ நடத்தத் திட்டமிடுதல்‌ வேண்டும்‌.


* பெருநகரங்களில்‌ கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்ளும்‌போது மாநகர ஆணையரின்‌ ஆலோசனையுடன்‌ குழந்தைகள்‌ நலனுக்காக சிறப்பாகச்‌ செயல்படும்‌ தொண்டு நிறுவனங்கள்‌, சுய உதவி குழுக்களைக்‌ கணக்கெடுப்பில்‌ ஈடுபடுத்தி எந்தவொரு கூடியிருப்பு பகுதியும்‌ விடுபடாமல்‌ கணக்கெடுப்புப்‌ பணியினை மேற்கொள்ளுதல்‌ வேண்டும்‌.


* கண்டறியப்படும்‌ அனைத்து பள்ளி செல்லாக் குழந்தைகளும்‌ அருகாமையிலுள்ள பள்ளிகளில்‌ உடனடியாக சேர்க்கப்பட வேண்டும்‌.


* கணக்கெடுப்பு களப்பணி - ஏப்ரல்‌ 2023 முதல்‌ இரண்டு வாரங்களிலும்‌ மற்றும்‌ மே 2023 இறுதி வாரத்திலும்‌ நடைபெற வேண்டும்‌. ஆசிரியர்கள்‌ கற்றல்‌ கற்பித்தல்‌ பணிகள்‌ பாதிக்காத வண்ணம்‌ கள அளவில்‌ கணக்கெடுப்பு பணியில்‌ ஈடுபட வேண்டும்’’. 


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.