சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் போராடி வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் இன்று நண்பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். பகுதி நேர ஆசிரியர் சங்கமும் டெட் ஆசிரியர் சங்கமும் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்ற நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்துக்கும் மேலாக ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டன. பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. இதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையும் வாசிக்கலாம்: TET Teachers: தமிழ்நாடு முழுவதும் தேர்தலில் போட்டி; அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் - டெட் ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு
இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மூவர் அடங்கிய குழு உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆசிரியர்கள் கைது
எனினும் அரசின் அறிவிப்பில் திருப்தி இல்லை என்றுகூறி அனைத்து ஆசிரியர் சங்கங்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. தொடர்ந்து நேற்று அதிகாலை, ஆசிரியர்களைக் காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்டு, எழும்பூர், புதுப்பேட்டை சமுதாய நலக் கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர் சங்கமும் டெட் ஆசிரியர் சங்கமும் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றன. எனினும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் சம வேலைக்கு சம ஊதியம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று (செப். 5ஆம் தேதி) இரவு அனைவரும் டிபிஐ வளாகத்தில் குவிந்தனர். அவர்களைக் காவல்துறை கைது செய்தது. ஆசிரியர்கள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார். இன்று நண்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: MoE Guidelines: மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம், தற்கொலைகள்... தடுப்பது எப்படி? - மத்திய அரசு வழிகாட்டல்!