பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது நாளான இன்று ஒளிபரப்பாகும் எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று வயது வித்தியாசமின்றி மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இப்படியான நிலையில், நடப்பு சீசனில் கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 


முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சி ரகளையாக சென்று கொண்டிருக்கிறது. இந்த முறை பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என இரு வீடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனை கவர தவறிய 6 போட்டியாளர்கள் வாரம்தோறும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால்பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் எந்த வித ஆக்டிவிட்டி டாஸ்கிலும் கலந்து கொள்ள முடியாது. வீட்டில் சமையல் வேலைகளை முழு பொறுப்பு ஏற்று செய்ய வேண்டும் உள்ளிட்ட பல விதிகள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு உள்ளது. 






இப்படியான நிலையில் நேற்று வெயிட் பார்ட்டி என்ற டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் வீட்டுக்கு தேவையான பொருட்களுக்கான தொகையில் குறிப்பிட்ட அளவு டாஸ்க்கில் கழிக்கப்படும் என்றும், மாறாக தோற்றுவிட்டால் மேக்கப் பொருட்கள் பறிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மற்றொரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் தோற்றால் ஆடைகள் அனைத்தும் எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் முதல் டாஸ்கில் ஜெயித்த போட்டியாளர்கள், இரண்டாவது டாஸ்க்கில் தோற்ற காட்சிகள் நேற்றைய எபிசோடில் ஒளிபரப்பானது. 


இந்நிலையில் 5வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பேசும் விஜய், “பிரதீப் என்மேல் ஷூவை கொண்டு இடிச்சிட்டு போனாரு. தீடிர்ன்னு எனக்கு கோபம் வந்துரும். நான் அடிச்சிருவேன். அப்புறம் மூக்கு, வாயெல்லாம் உடைஞ்சிரும். மேலும் என் மேல் ரொம்ப பாசமான பசங்க எல்லாரும் வெளியே இருக்காங்க. நீங்க வெளியே போனதும் சம்பவம் பண்ணிருவாங்க” என தெரிவிக்கிறார். இதைக் கேட்டு அனைவருமே அதிர்ச்சியடைகின்றனர். உடனே பதிலளிக்கும் விஷ்ணு விஜய், “நான் இப்ப செருப்பால உன்னை தட்டிட்டேன். முடிஞ்சா என்னை அடி” என கூற, ’நீ செருப்பால தட்டிப்பாரு’ என விஜய் மல்லுக்கட்டுகிறார். 


தொடர்ந்து பேசும் பிரதீப், “எனக்கு ஒரு மாற்றுக்கருத்து இருக்கு பிக்பாஸ். நான் வந்து எல்லோரையும் அடிக்கப்போறேன்” என சொல்கிறார். இதனால் கடுப்பாகும் மாயா கிருஷ்ணா, ’உங்க பிரச்சினைக்கு என்னை ஏன் இழுக்குறீங்க?’ என கேட்கும் காட்சிகள் இந்த ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது.