10ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 35-ல் இருந்து 20ஆகக் குறைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. மாணவர்களின் இடை நிற்றல் ஆவதை தடுக்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து மகாராஷ்டிரப் பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் கூறும்போது, ’’பொதுவாக நாடு முழுவதும் 100 மதிப்பெண்களுக்கு 35 மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி வழங்கப்படும். ஆனால், நிறைய மாணவர்களால் அதை எடுக்க முடியாமல் போகிறது. தேர்வில் தோல்வி அடைந்ததும் ஏராளமானோர் கல்வியைக் கைவிடுகின்றனர். இதனால் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க முடிவு செய்துள்ளோம். இதன்படி கணிதம் மற்றும் அறிவியலில் மாணவர்கள் 20 மதிப்பெண்கள் பெற்றாலே, அவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படும்.


செக் வைத்த கல்வித்துறை


ஆனாலும் அந்த மாணவர்களால் தொடர்ந்து கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் படிப்புகளைப் படிக்க முடியாது. கலை, மானுடவியல் சார்ந்து அந்த மாணவர்கள் படிப்புகளைத் தொடரலாம்’’ என்று தெரிவித்தனர்.


மகாராஷ்டிர மாநில உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியத்தின் தலைவர் சரத் கோசவி இதுகுறித்துக் கூறும்போது, ’’இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வராது. மாநிலம் முழுவதும் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும்போது இந்த முறையும் கொண்டு வரப்படும். ஏற்கெனவே இதற்கு பள்ளிக் கல்வித்துறையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.


குவியும் ஆதரவும் எதிர்ப்பும்


அரசின் இந்த முடிவுக்குக் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மாணவர்களின் இடைநிற்றல் குறையும் என்று ஆதரவாக சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். அதேபோல, ’கணிதம், அறிவியல் தெரியாத மாணவர்கள் வேறு துறைகளில் சிறந்து விளங்கலாம். அவர்களுக்கான வாய்ப்பை புதிய நடைமுறை அளிக்கும்’ என்கின்றனர். ’டியூஷன் உள்ளிட்டவற்றுக்கு செலவு செய்வதும் மன அழுத்தத்துக்கு உள்ளாவது குறையும்’ என்றும் தெரிவித்துள்ளனர்.


எனினும் வேறு பலர், ’கணிதமும் அறிவியலும்தான் பகுத்தாய்வு செய்யும் திறனுக்கு அடிப்படை. அதிலேயே தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்கும்போது கற்றல் தரம் நிச்சயம் பாதிக்கப்படும்’ என்று விமர்சித்து வருகின்றனர். ’20 மதிப்பெண்கள் இருந்தாலே போதும் எனில், செய்முறை மதிப்பெண்களை எடுத்தாலே போதும், எதை வைத்து தியரியைப் பரிசோதிப்பது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


கூடுதல் அம்சம் மட்டுமே


எனினும் இந்த நடைமுறையை விரும்பாத தேர்வர்கள், துணைத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்று, புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறை கூடுதல் அம்சம் மட்டுமே என்றும் மகாராஷ்டிர மாநிலக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.