எஸ்எஸ்ஏ எனப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படாத நிலையில், இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
எஸ்எஸ்ஏ திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு பாக்கி வைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 32 ஆயிரத்து 500 அரசு ஊழியர்களுக்கு மேல் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. எஸ்எஸ்ஏ திட்டத்தின் இயக்குனராக பணியாற்றும் ஆர்த்தி ஐஏஎஸ்-க்கே ஊதியம் வழங்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 4ஆம் தேதி ஆகிவிட்ட நிலையில், செப்டம்பர் மாதத்துக்கான ஊதியம் இன்னும் தமிழ்நாடு அரசால் அளிக்கப்படவில்லை. இதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கார் பந்தயம் நடத்த காசிருக்கிறதா?- எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
தனியார் நடத்திய கார் பந்தயத்திற்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மத்திய அரசு நிதி வரவில்லை என்ற காரணம் கூறி ஆசிரியர்களுக்கு சென்ற மாதத்திற்கான சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, மாநில அரசின் நிதியிலிருந்து சுமார் 32,500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். இனி மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாது வழங்க வேண்டும்.
மனித நேயமற்ற செயல்- பாமக நிறுவனர் ராமதாஸ்
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்குவதற்கு மத்திய அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதியே கல்வித்துறை முடங்குவதற்கு காரணமாக அமைந்து விடக் கூடாது. கல்வித்துறைக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு காட்டும் பிடிவாதம் நியாயமானதல்ல.
அதே நேரத்தில் மத்திய அரசின் நிதி வரவில்லை என்பதையே காரணமாகக் காட்டி, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட ஆசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியத்தை வழங்காத திறமையற்ற தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்.
எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் இத்தகைய போக்கு: காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அதிகாரங்களை குவித்துக் கொண்டு ஒற்றை ஆட்சி மூலம் செயல்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமைத்த பிறகும் பா.ஜ.க.வின் மாநில விரோதப் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் இத்தகைய போக்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
2020 தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் சமக்ரா சிக்ஷா அபியான் நிதி ஒதுக்கீட்டை வழங்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இதனால் மாத ஊதியம் வழங்கப்படாத காரணத்தால் பண்டிகைகளுக்கு செலவு செய்ய முடியாத நிலை, கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை போன்ற பல்வேறு தொல்லைகளுக்கு ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆளாகி வருகிறார்கள.
இதில் மாதம் ரூபாய் 12500 ஊதியமாக பெறுகிற 12000 பகுதி நேர ஆசிரியர்களும் அடங்குவார்கள். ஒன்றிய அரசின் நியாயமற்ற, பாரபட்ச போக்கு காரணமாகவும், புதிய கல்விக் கொள்கையை திணிக்க வேண்டுமென்கிற போக்கினாலும், இத்தகைய அவலநிலையை தமிழகம் சந்தித்து வருகிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அரசியம் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.