தேர்வு வரலாற்றில் முதல்முறையாக தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வை எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இந்தத் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பிராந்திய மொழிகளில் சிஏபிஎஃப் தேர்வுகள்
அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிஏபிஎஃப் தேர்வுகள் அனைத்தும் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள சிஆர்பிஎஃப் தேர்வில் மொத்தமுள்ள 9.212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
ஆண்டாண்டு காலமாக இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. இதனால் தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதிய நிலையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்வு வரலாற்றில் முதல்முறையாக தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வையும் சிஎச்எஸ்எல்இ (CHSLE Examination) தேர்வையும் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இந்தத் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன.
மே மாதத்தில் தேர்வு
இந்த நிலையில் தற்போது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் கூடுதலாக அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி மற்றும் கொங்கனி ஆகிய மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன்படி முதல் எம்டிஎஸ் தேர்வு (தொழில்நுட்பம் அல்லாத பல்திறன் தேர்வு) 2023 மே 2ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இந்த முடிவின் மூலம், லட்சக்கணக்கான மக்கள் தங்களின் தாய் மொழியில், பிராந்திய மொழிகளில் தேர்வெழுதி, தேர்ச்சி பெற முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை வழங்கியுள்ளது. எம்டிஎஸ் தேர்வுக்கான அட்டவணை ஏற்கெனவே வெளியாகி உள்ள நிலையில், சிஎச்எஸ்எல்இ (CHSLE Examination) தேர்வு அட்டவணை மே மாதத்தில் வெளியிடப்பட உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்: CAPF: மத்திய காவல் படைகளில் என்னென்ன பிரிவுகள்..? ஒவ்வொரு தேர்விற்கும் என்னென்ன வித்தியாசம்..? ஓர் விரிவான அலசல்..!
CAPF Exam: முதல்முறையாக தமிழிலும் சி.ஏ.பி.எஃப் தேர்வு; முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைக்கு இசைந்த மத்திய அரசு