எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. மாண்டிசோரி பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்துத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணியின்‌ மாநில பொதுச்செயலாளர்‌ ச.மயில்‌ வெளியிட்டுள்ள அறிக்கை:


’’தமிழகத்தில்‌ தொடக்கக் கல்வித்துறையின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ 2,381 அரசு நடுநிலைப் பள்ளிகளில்‌ செயல்பட்டுவந்த அங்கன்வாடி மையங்களை மூடும்‌ முடிவைத் தமிழக அரசு திரும்பப்‌ பெற வேண்டும்‌ எனவும்‌, பள்ளிகளுடன்‌ இணைந்த அங்கன்வாடி மையங்களில்‌ முன்பருவ ஆசிரியர்‌ பயிற்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமித்து செயல்படுத்த வேண்டும்‌ எனவும்‌, தமிழகம்‌ முழுவதும்‌ அனைத்து அரசு ஆரம்ப, நடுநிலைப்‌ பள்ளிகளிலும்‌ பள்ளிகளுடன்‌ இணைந்த அங்கன்வாடி மையங்களைத்‌ தொடங்கிட வேண்டும்‌ எனவும்‌ தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக்‌ கேட்டுக் கொள்கிறது.


தமிழகத்தில்‌ கடந்த அதிமுக ஆட்சியில்‌ 2018 டிசம்பர்‌ மாதத்தில்‌ 2,381 அரசு நடுநிலைப்பள்ளிகளுடன்‌ இணைந்த அங்கன்வாடி மையங்கள்‌ தொடங்கப்பட்டன. இம்மையங்களில்‌ எல்கேஜி, யூகேஜி வகுப்புக்களில்‌ மாணவர்கள்‌ சேர்க்கப்பட்டனர்‌. அரசின்‌ இம்முயற்சி நல்ல வரவேற்பைப்‌ பெற்றது. ஆனால்‌, இதில்‌ அரசு செய்த மிகப்பெரிய தவறு என்னவென்றால்‌ எல்கேஜி, யூகேஜி வகுப்புக்களில்‌ கற்பிப்பதற்கு 1 முதல்‌ 5 வகுப்புக்களில்‌
கற்பித்தல்‌ பணியில்‌ இருந்த இடைநிலை ஆசிரியர்களை நியமித்ததுதான்‌. 


ஏனென்றால்‌ கடந்த 8 ஆண்டுகளுக்கும்‌ மேலாக தொடக்கக் கல்வித்துறையில்‌ ஆசிரியர்‌ நியமனங்களே செய்யப்படாத நிலையில்‌, ஏற்கனவே 1 முதல்‌ 5 வகுப்பு கற்பிக்கும்‌ இடைநிலை ஆசிரியர்கள்‌ பற்றாக்குறையாக உள்ள நிலையில்‌ 2,381 இடைநிலை ஆசிரியர்களைக்‌ கொண்டுபோய்‌ அங்கன்வாடி வகுப்புகளைக்‌ கையாள நியமித்தது 1 முதல்‌ 5 வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கான கற்பித்தல்‌ பணியை வெகுவாகப்‌ பாதிக்க வைத்தது. 


தற்போதைய நிலையில்‌ மாநிலம்‌ முழுவதும்‌ 5000-க்கும்‌ மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்‌ காலிப்பணியிடங்கள்‌ உள்ள நிலையில்‌, ஏற்கனவே பள்ளிகளுடன்‌ இணைந்த அங்கன்வாடிகளில்‌ நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீண்டும்‌ 1 முதல்‌ 5 வகுப்புகளுக்கான கற்பித்தல்‌ பணிக்கு கொண்டுவரப்பட்டது சரியான நடவடிக்கைதான்‌. ஆனால்‌, அதற்காக பள்ளிகளுடன்‌ இணைந்த அங்கன்வாடி மையங்களை மூடாமல்‌ அவற்றில்‌ மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்து தொடர்ந்து நடத்திட வேண்டும்‌.


இன்றைய காலச்சூழலில்‌ பெற்றோர்கள்‌ தங்களது குழந்தைகளை 3 வயதிலேயே பள்ளிகளுக்கு அனுப்பி விடுகின்றனர்‌. அனைத்து அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளிலும்‌ அங்கன்வாடி மையங்கள்‌ செயல்பட்டால்‌ அப்பகுதியில்‌ உள்ள பெற்றோர்கள்‌ தங்கள்‌ குழந்தைகளை அம்மையங்களில்‌ உள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புக்களுக்கு அனுப்புவர்‌. 




அக்குழந்தைகள்‌ அப்பள்ளிகளிலேயே 1ம்‌ வகுப்பைத்‌ தொடர்ந்து படிப்பதற்கும்‌ வாய்ப்புக்‌ கிடைக்கும்‌ மேலும்‌, அப்பகுதியில்‌ உள்ள பெற்றோர்கள்‌ பல ஆயிரங்கள்‌ பணம்‌ செலவு செய்து சுயநிதிப்‌ பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும்‌ நிலையும்‌ ஏற்படாது. பணம்‌ செலுத்தி தங்கள்‌ குழந்தைகளுக்கு முன்பருவக்‌ கல்வி பெற இயலாத பெற்றோர்களுக்கும்‌ இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்‌.


எனவே, தமிழக அரசு நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ செயல்பட்டுவந்த 2,381 அங்கன்வாடி மையங்களை மூடும்‌ முடிவைக்‌ கைவிட்டு, அவற்றில்‌ மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமித்து அவற்றைச் செயல்படுத்த வேண்டும்‌. அதுமட்டுமல்லாது படிப்படியாக மாநிலம்‌ முழுவதும்‌ அனைத்து அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளிலும்‌ அங்கன்வாடி மையங்களை உருவாக்கி அவற்றில்‌ எல்கேஜி, யூகேஜி வகுப்புக்களைத்‌ துவக்கி, அதில்‌ மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்திட வேண்டும்‌. 


இதனால்‌ அரசு ஆரம்ப, நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ மாணவர்கள்‌ எண்ணிக்கை உயரும்‌. அரசுப் பள்ளி மாணவர்களின்‌ கல்வித்தரம்‌ மேம்படும்‌. ஆனால்‌, ஒருபோதும்‌ அங்கன்வாடி மையங்களில்‌ ஏற்கனவே ஆரம்ப வகுப்புக்களில்‌ பணியாற்றிக்‌ கொண்டிருக்கும்‌ இடைநிலை ஆசிரியா்களை நியமிக்கக்‌ கூடாது என தமிழக அரசைக்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.


மேலும்‌, தமிழகத்தில்‌ தொடக்கக் கல்வியில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்வித் தரத்தை மேம்படுத்த உடனடியாக 5000க்கும்‌ மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்‌ காலிப்‌ பணியிடங்களை நிரப்ப வேண்டும்’’. 


இவ்வாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக்‌ கேட்டுக்கொள்கிறது.