கோடை விடுமுறை முடிந்த பிறகு, பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இதனால் அனைத்துப் பள்ளிகளுக்கும் இதே தேதி பின்பற்றப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி, 22ஆம் தேதியோடு முடிவு பெற்றது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற்றது. அதேபோல 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்.5-ம் தேதியோடு பருவத் தேர்வுகள் முடிந்தன. இவர்களுக்கு ஏப்.6ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை
இந்த நிலையில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ரம்ஜான் பண்டிகை மற்றும் மக்களவைத் தேர்தல் பணிகள் காரணமாக ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 22, 23 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற்ற பிறகு, ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே கோடை விடுமுறை முடிந்த பிறகு, பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இதனால் அனைத்துப் பள்ளிகளுக்கும் இதே தேதியில் பள்ளிகள் திறக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அண்மையில் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் அண்மையில் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பள்ளி பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் தேவைப்படுமா? மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறுகிறது? என்பது குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டன. எனினும் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.
பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு?
ஆண்டுதோறும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும். எனினும் இந்த ஆண்டு வெயில் மிகவும் கடுமையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மஞ்சல் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறப்பு 1 முதல் 2 வாரத்துக்குத் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதனாலும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது. எனினும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டது எப்போது?
ஆண்டுக்கு ஆண்டு வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 2023ஆம் ஆண்டு பள்ளிகள் ஜூன் 12ஆம் தேதியே திறக்கப்பட்டது. 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12 அன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 1 முதல் ஐந்தாம் வகுப்புக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.