வரும் 2025- 26 கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை சிபிஎஸ்இ தொடங்கி உள்ளது. செமஸ்டர் முறையை அறிமுகம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


அடுத்த மாதத்தில் பல்வேறு பள்ளிகளின் முதல்வர்களுடன் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வி அமைச்சகம் மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரே கல்வியாண்டில் இரண்டு பொதுத் தேர்வுகளை எப்படி நடத்த முடியும் என்பதற்கான கல்வி சார்ந்த கட்டமைப்பை வகுக்க சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. எனினும் புதிய கல்வியாண்டு அட்டவணை, இளநிலை மாணவர் சேர்க்கை தேதிகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் முன்னெடுக்கப்பட உள்ளது.


ஓர் ஆண்டுக்குத் தள்ளி வைப்பு


முன்னதாக, ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தும் முறையினை 2024-25 கல்வியாண்டில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டு,  2025-26 கல்வியாண்டுக்கு அது மாற்றப்பட்டுள்ளது.


புதிய கல்விக் கொள்கையின்படி, புதிய தேசிய பாடத்திட்ட அமைப்பு (NCF) 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு செமஸ்டர் தேர்வை முன்மொழிந்திருந்தது. இதைத் தொடர்ந்து பொதுத் தேர்வினை மாணவர்கள் பயமில்லாமல் எழுதும் வகையிலும் அதிகபட்சப் பயன்களைப் பெறும் வகையிலும் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும் நடைமுறை கொண்டு வரப்படுவதாக கல்வி அமைச்சகம் தெரிவித்தது. இரண்டு தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களில், மாணவர்கள் சிறந்த மதிப்பெண்ணை தேர்வு செய்து கொள்ளலாம். எனினும் தேர்வை நடத்துவதற்கான லாஜிஸ்டிக்ஸ் என்பது சவாலாகவே உள்ளது. எனினும் தொடர்ந்து தேர்வுகளை நடத்துவது சோர்வை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது என்றும் சிபிஎஸ்இ யோசித்து வருகிறது.


பொறியியல் நுழைவுத் தேர்வு போல; ஆனால் கட்டாயமில்லை


இந்தத் தேர்வு ஜேஇஇ பொறியியல் நுழைவுத் தேர்வு போல இருக்கும். அதே நேரத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு எழுதுவது முழுக்க முழுக்க மாணவர்களின் விருப்பம். அது கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் பொதுத் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன. 2017-ல் சிசிஇ (CCE) முறை அறிமுகம் செய்யப்பட்டு, திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.