Governor Ravi: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறார் என உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளது. 


ஆளுநருக்கு எதிரான வழக்கு:


தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 10ம் தேதி நடத்திய விசாரணையின் போது, ஆளுநரின் செயல்பாடு தொடர்பான விவகாரம் மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக கூறியது. மேலும், அரசியல் சாசனம் 200-வது பிரிவின்படி சட்டசபையில் நிறைவேற்றிய அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத நிலையில் மறுபரிசீலனைக்காக கூடிய விரைவில் ஆளுநர் சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அப்படி திருப்பி அனுப்புகிற மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் அதற்கு தாமதம் இல்லாமல் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் எனவும் கூறினர். அதோடு, மத்திய அரசின் உள்துறை செயலாளர் மற்றும் ஆளுநரின் செயலாளர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள்:


இந்த சூழலில் தான் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10 மாசோதாக்களுக்கு, அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பினார். அரசு சார்பில் உடனடியாக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. அதில், திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 


டெல்லி விரைந்த ஆளுநர்:


இதனிடையே, நேற்று மாலை ஆளுநர் ரவி டெல்லி சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை, ஆளுநர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார் எனவும் கூறப்படுகிறது.


வழக்கு விசாரணை ஒத்திவைப்பு:


இந்நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஆளுநர் ரவி எந்த வித விளக்கத்தையும் கூறாமல் மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரின் செயல்பாட்டால் 8 கோடி தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஒவ்வொரு மசோதாவிற்காகவும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட முடியாது” என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.


தலைமை நீதிபதி கருத்து:


அப்போது பேசிய நீதிபதிகள், “3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? 2020ம் ஆண்டு ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. உச்சநீதிமன்றம் கடந்த 10ம் தேதி ஆணை பிறப்பித்தது. 13ம் தேதி மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தின் 200வது பிரிவின்  படி,  மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக கூற முடியாது. சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக  மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால்,  அது நிதி மசோதாவிற்கு நிகரானதாக மாறிவிடும்” என கூறினார். தொடர்ந்து, கேரள ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்குடன், தமிழக ஆளுநருக்கு எதிராக மாநில அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கும், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


மசோதாக்களின் விவரங்கள்:



  • சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  • தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  •  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  •  தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர்  பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  •  தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  •  தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  • தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  •  அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  • தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா