புதுச்சேரியில் செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் தூய்மைப் பணிகளையும், முன்னேற்பாடுகளையும் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆட்சியர் அனுமதி வரும் வரை பள்ளிப் பேருந்துகள் இயக்கப்படாது. அடுத்த உத்தரவு வரும் வரை மதிய உணவு வழங்கப்படாது என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.




இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக கல்வி துறை இயக்குநர் ருத்ரகவுடு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார், அதில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:


* பள்ளிகளில் மாணவர் வருகைக்காக ஆகஸ்ட் 30-ம் தேதி திறந்து முன்னேற்பாடுகளைச் செய்யலாம். பள்ளிகள் காலை 9 முதல் பகல் 1 மணி வரை அரை நாள் மட்டுமே செயல்படும். 9, 11ஆம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செயல்படும். அதேபோல் 10, 12ஆம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இயங்கும். தேவைப்படுவோர் அருகாமையிலுள்ள அரசுப் பள்ளியை அணுகி, சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.


* அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பேருந்துகள் இயக்கப்படாது. பள்ளிப் பேருந்துகள் ஆட்சியர் அனுமதிக்குப் பிறகே இயக்கப்படும்.


* கொரோன தொற்றோ அல்லது அறிகுறியோ உள்ள குழந்தைகளைப் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பக் கூடாது. அதேபோல் வீட்டில் யாருக்கேனும் தொற்றோ, அறிகுறியோ இருந்தாலும் அக்குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது.


* பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் உடனே அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பள்ளித் தரப்பு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த நடைமுறையைப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டும். பள்ளிகளிலும் கொரோன விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.


* ஆக. 30, 31-ம் தேதிகளில் பள்ளிகளைத் தூய்மைப்படுத்துதல், சமூக இடைவெளியுடன் குழந்தைகளை அமர வைக்க முன்னேற்பாடு ஆகியவற்றைச் செய்யவேண்டும்.


* பள்ளியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நுழையும் முன்பு கைகளைக் கிருமிநாசினி அல்லது சோப்பு போட்டு தூய்மை செய்தே அனுமதிக்க வேண்டும்.


* தினமும் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்து, பள்ளிக்கு அனுமதிக்க வேண்டும்.


* கழிப்பறை, கை கழுவும் இடம் ஆகியவற்றில் இடைவெளி, தூய்மையைப் பராமரிக்க வேண்டும்.


பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கலாம் - மத்திய அரசு எச்சரிக்கை