அடுத்த 3 ஆண்டுகளில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் டிஜிட்டல் பாடப் புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பன்மொழித் தன்மையை ஊக்குவிக்கும் வகையிலான தேசிய கல்விக் கொள்கையின் கூறுகளை ஒட்டி, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


பள்ளி மற்றும் கல்லூரி கல்வி நிறுவனங்களின் ஒழுங்கு அமைப்புகளான யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிஇஆர்டி, என்ஐஓஎஸ், இக்னோ (UGC, AICTE, NCERT, NIOS, IGNOU) ஆகிய அமைப்புகளும் ஐஐடிகள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், என்ஐடிகளின் தலைமைகளும் அனைத்துப் படிப்புகளுக்கும் டிஜிட்டலில், பாடப் புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையும் மாநில பள்ளிகளுக்கான டிஜிட்டல் பாட நூல்களை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.


மொழி மீதான தடையை நீக்கவே


நாடு முழுவதும் கற்கவும் கற்பிக்கவும் மொழி மீதான தடையை நீக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிராந்திய மொழிகளில் மாணவர்களை படிக்க அனுமதிப்பதோடு, கற்றல் விளைவுகளை மேம்படுத்தி, புத்தாக்க சிந்தனைகளை ஊக்கப்படுத்தும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.  


அனைத்துப் படிப்புகளுக்கும் பிராந்திய பாடப் புத்தகங்கள்


செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயலியான அனுவதினி மூலம், பாடப் புத்தகங்கள் பிராந்திய மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யும் வேலை, கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பொறியியல், மருத்துவம், சட்டம், இளங்கலை, முதுகலை மற்றும் திறன் சார்ந்த படிப்புகள் என அனைத்துப் படிப்புகளுக்கும் பிராந்திய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.


திக்‌ஷா இணையதளத்தில் (DIKSHA) சுமார் 30 இந்திய மொழிகளில், பள்ளி பாடப் புத்தகங்கள் ஏற்கெனவெ வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள், ஏற்கெனவே 13 இந்திய மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் டிஜிட்டல் பாடப் புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தேசிய கல்விக் கொள்கை


பாஜக தலைமையிலான மத்திய அரசு, 2020ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் தாய்மொழி வழிக் கல்வி உள்ளிட்ட அம்சங்களுடன் 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு, மும்மொழிக் கொள்கை, தொழில் கல்வி உள்ளிட்ட கூறுகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இவை கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தின. 


இதையும் வாசிக்கலாம்: வேறு பெயரில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலங்கள்: தமிழ்நாட்டைக் குறிப்பிட்டாரா மத்திய அமைச்சர்?