நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருவதாகவும், ஆரம்பத்தில் கல்விக் கொள்கையை எதிர்த்த மாநிலங்கள் வேறு பெயரில் தற்போது அமல்படுத்தி வருவதாகவும் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஐஐடி ஹைதராபாத்தில், 2024ஆம் ஆண்டுக்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கண்காட்சியான IInvenTiv இன்று தொடங்கியது. இதில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தொழில்துறைக்கும் கல்வித்துறைக்கும் இடையிலான தொடர்புகளை வளர்ப்பதற்கான ஒரு தளமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ’’நான் மகிழ்ச்சியாக உள்ளேன். நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருகின்றன. ஆரம்பத்தில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்த மாநிலங்கள்கூட தற்போது வேறு பெயரில் அமல்படுத்தி வருகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு கூறுகளைத் தமிழக அரசு வேறு பெயரில் அமல்படுத்தி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி வருகிறார். இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், நம் பள்ளி, நம் பெருமை உள்ளிட்ட திட்டங்கள் தேசிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டவையே என்று விமர்சனங்கள் எழுந்தன.
தனி கல்விக் கொள்கை
எனினும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாகத் தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றைத் தமிழக அரசு அமைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்ய, பின்வரும் குழுவினை அமைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி குழுவின் தலைவராக புதுடெல்லி உயர் நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி த.முருகேசன் நியமிக்கப்பட்டார்.
என்றாலும் TEALS என்ற பெயரில் தமிழகப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டம் தேசிய கல்விக் கொள்கையின் கூறுகளில் ஒன்றே, அதை தமிழ்நாடு அரசு வேறு பெயரில் அறிமுகம் செய்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.